(எம்.மனோசித்ரா)
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள நிர்ணய சபையினூடாக 1000 ரூபாய் அடிப்படைச் சம்பளம் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது. எனினும் அடிப்படைச் சம்பளத்தை மாத்திரம் வழங்கிய பின்னர் வேலை நாட்களை குறைத்தல், ஓய்வு பெறும் வயதெல்லையை குறைத்தல் உள்ளிட்ட சலுகைகளை இல்லாமலாக்கிவிடக் கூடாது. எனவே நிபந்தனைகளற்ற அடிப்படைச் சம்பள அதிகரிப்பையே வலியுறுத்துவதாக தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் என்பன தெரிவித்துள்ளன.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் மற்றும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் ஆகியோர் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் மேலும் கூறுகையில், சம்பள நிர்ணய சபையினூடாக சம்பள அதிகரிப்பை பெற்றுக் கொடுப்பது வரவேற்கத்தக்கதாகும். எனினும் மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் சலுகைகள் அதன் மூலம் இல்லாமல் போய்விடக் கூடாது.
1000 ரூபாய் அடிப்படைச் சம்பளம் வழங்கப்பட்டால் அதனை நாம் ஆதாரிப்போம். எனினும் அதற்காக சலுகைகளை நீக்கிவிடக் கூடாது. மாறாக மக்களுக்கு துரோகம் இழைக்கப்பட்டால் பாரியளவிலான போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றார்.
பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் கூறுகையில், பல சுற்று பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்துள்ள நிலையில் சம்பள நிர்ணய சபையூடாக சம்பளத்தை பெற்றுக் கொடுக்க முயற்சிக்கப்படுகிறது. சம்பள நிர்ணய சபையினூடாக சம்பள அதிகரிப்பை மாத்திரமே பெற்றுக் கொடுக்க முடியும்.
வேலை நாட்கள், ஓய்வு பெறும் வயது உள்ளிட்ட இதர விடயங்கள் குறித்து அவதானம் செலுத்த முடியாது. எனவே வழமையைப் பாதுகாத்து நிபந்தனையற்ற 1000 ரூபாய் சம்பளம் வழங்கப்பட வேண்டும். இது தொடர்பில் தொழில் அமைச்சின் செயலாளருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பெருந்தோட்டத் தொழிலாளர்கள் அவர்களின் தொழிலை நேசிக்கின்றனர். அவர்கள் நாட்டை நேசிக்கும் மக்களாவர். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தவறிழைக்கமாட்டர்.
அவர்கள் இனவாத செயற்பாடுகளிலோ, பயங்கரவாத செயற்பாடுகளிலோ ஈடுபடமாட்டார்கள். நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றும் அவர்களின் தேவையை பூர்த்தி செய்ய வேண்டியது அனைவரதும் பொறுப்பாகும் என்றார்.
No comments:
Post a Comment