ராஜபக்ஷர்களுக்கு எதிராக அரசியல் சூழ்ச்சியை முன்னெடுக்க ஒருபோதும் இடமளிக்க முடியாது, எதிர்கட்சியினர் வகுத்துள்ள திட்டம் ஒருபோதும் வெற்றி பெறாது - ஜோன்ஸ்டன் பெர்னான்டோ - News View

About Us

About Us

Breaking

Sunday, February 14, 2021

ராஜபக்ஷர்களுக்கு எதிராக அரசியல் சூழ்ச்சியை முன்னெடுக்க ஒருபோதும் இடமளிக்க முடியாது, எதிர்கட்சியினர் வகுத்துள்ள திட்டம் ஒருபோதும் வெற்றி பெறாது - ஜோன்ஸ்டன் பெர்னான்டோ

(இராஜதுரை ஹஷான்)

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்குள் ராஜபக்ஷர்களுக்கு எதிராக அரசியல் சூழ்ச்சியை முன்னெடுக்க ஒருபோதும் இடமளிக்க முடியாது. கூட்டணியின் பங்காளி கட்சியினர் கூட்டு பொறுப்புடன் செயற்பட வேண்டும் என நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ தெரிவித்தார்.

பொல்காவலை பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், அனைத்து தரப்பினரையும் ஒன்றினைத்து பொதுஜன பெரமுன ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையில் அரசாங்கத்தை தோற்றுவித்துள்ளது. நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை ஜனாதிபதி சிறந்த முறையில செயற்படுத்துகிறார். 

2019ஆம் ஆண்டு ஆட்சியதிகாரத்தை பெற்ற காலத்திலிருந்து பல சவால்கள் தோற்றம் பெற்றுள்ளன. அனைத்தையும் சிறந்த முறையில் வெற்றி கொண்டுள்ளோம்.

அரசாங்கத்திற்குள் இருந்துகொண்டு அதற்கு எதிராக செயற்படும் தரப்பினரை இனங்காண்பது கடினமானதாக உள்ளது. ஆளும் தரப்பினர் ஒரு சிலர் எதிர்க்கட்சியினருக்கு சார்பான செயற்படுகின்றனரா என்ற சாதாரண சந்தேகம் எழுந்துள்ளது. 

முன்னாள் ஜனாதிபதி தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியை 2014 ஆம் ஆண்டு வீழ்த்துவதற்கு நண்பர்களாக இருந்தவர்களே முன்னின்று செயற்பட்டார்கள்.

ராஜபக்ஷர்களுக்கு எதிரான சூழ்ச்சியை பொதுஜன பெரமுனவிற்குள் இருந்து கொண்டு முன்னெடுக்க இடமளிக்க முடியாது. கூட்டணியில் அங்கம் வகிக்கும் பங்காளி கட்சியினர் கூட்டு பொறுப்புடன் செயற்படலாம். 

பல தரப்பட்ட அரசியல் கட்சிகளை ஒன்றினைத்து கூட்டணியமைத்துள்ளதால் கருத்து முரண்பாடுகள் தோற்றம் பெறுவது சாதாரண விடயம். பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணிக்குள் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாட்டுக்கு பேச்சுவார்த்தை ஊடாக தீர்வை காணமுடியும். 

இவ்விடயம் குறித்து ஜனாதிபதி, பிரதமர் மற்றும் உயர் மட்ட தலைவர்கள் இவ்வாரம் சிறந்த தீர்மானத்தை எடுப்பார்கள். கூட்டணிக்குள் முரண்பாட்டை ஏற்படுத்தி நல்லாட்சி அரசாங்கத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தை தற்போது ஏற்படுத்தலாம் என்று எதிர்கட்சியினர் வகுத்துள்ள திட்டம் ஒருபோதும் வெற்றி பெறாது என்றார். 

No comments:

Post a Comment