மத்திய வங்கி முறிகள் மோசடியுடன் தொடர்புடைய பிரதிவாதிகளான மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் மற்றும் பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளராக பணியாற்றிய அஜான் புஞ்சிஹேவா ஆகியோரை நாட்டிற்கு அழைத்து வருவதற்கு நீதிமன்ற உத்தரவிற்கு அமைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அரச சிரேஷ்ட சட்டத்தரணி வசந்த பெரேரா மூவரடங்கிய விசேட நீதிமன்றத்தில் நேற்று அறிவித்துள்ளார்.
அர்ஜுன மகேந்திரன், பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட 10 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே அவர் இதனை கூறினார்.
நீதிபதிகளான சம்பா ஜானகி ராஜரத்ன, தமித் தொடவத்த மற்றும் நாமல் பலல்லே ஆகியோர் முன்னிலையில் விசேட மேல் நீதிமன்றத்தில் குறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையை எதிர்வரும் மார்ச் மாதம் 18 ஆம் திகதி வரை ஒத்திவைத்து நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டுள்ளது.
2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி மத்திய வங்கியில் இடம்பெற்ற முறிகள் ஏலத்தின் போது, அரசுக்கு சொந்தமாக 688 மில்லியன் ரூபா பணத்தை முறையற்ற விதத்தில் கையாண்டமை தொடர்பில் சட்டமா அதிபரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment