இலங்கைக்கு மாகாண சபை முறைமை அவசியம், இந்த வருட இறுத்திக்குள் தேர்தலை எதிர்பார்க்கலாம் என்கிறார் பிள்ளையான் - News View

About Us

About Us

Breaking

Saturday, February 6, 2021

இலங்கைக்கு மாகாண சபை முறைமை அவசியம், இந்த வருட இறுத்திக்குள் தேர்தலை எதிர்பார்க்கலாம் என்கிறார் பிள்ளையான்

மாகாண சபை அதிகாரப் பகிர்வு பிரிவினையை நோக்கி நகராது சிறுபான்மை சமூகத்தவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு என்ற நம்பிக்கையை சிங்கள மக்களுக்கு ஏற்படுத்துவதன் மூலமும் மக்கள் மயப்படுத்தப்பட்ட முறையான திட்டங்களை முன்மொழிவதனால் மாத்திரமே மாகாண சபை முறைமை வெற்றியளிக்கும். எனவே மாகாண சபைத் தேர்தல் விரைவில் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி அரசாங்கத்திடம் தொடர்ந்தும் முன்வைத்து வருவதாக அக்கட்சியின் தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், நாட்டை நேசிக்கும் ஒவ்வொருவரும் நம்மோடு இணைந்து பணியாற்ற வருமாறு “ஜனாதிபதி தனது சுதந்திர தின உரையில் அழைப்பு விடுத்துள்ளார். 

மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படல் வேண்டும். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்திலிருந்து மாகாண சபைத் தேர்தலை நடாத்துமாறு கோரி வருகின்றது.

இப்போதும் நாம் இந்த தேர்தல் நடத்தப்படல் வேண்டும் என அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளோம். அரசாங்கமும் தேர்தலை நடத்த வேண்டும் என்ற முயற்சியில் இறங்கினாலும் கொவிட்-19 காரணமாக சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த வருட இறுத்திக்குள் மாகாண சபைத் தேர்தலை எதிர்பார்க்கலாம். அதற்கான திட்டமிடலைத்தான் நாங்களும் செய்து கொண்டு வருகின்றோம்.

கிழக்கில் நானும் முதலமைச்சராக இருந்தவர். இலங்கையைப் பொறுத்த வரையில் மாகாண சபை முறைமைதான் ஏற்றுக் கொள்ளப்பட்ட தொன்றாகும். இது சட்டமாக்கப்பட்டுள்ளது. இது இந்திய அரசாங்கத்தின் தலையீட்டால் கொண்டுவரப்பட்டது.

பலவிதமான பின்னடைவுகளும், பலவீனங்களும் இருந்தாலும், மக்கள் மயப்படுத்தப்பட்ட ஒரு இயக்கமாக செயற்பட்டால் சிங்கள மக்களுக்கும் இது ஒரு பிரிவினையாக நகராது மாகாண சபை உறுதியாக வெற்றியளிக்கும்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஒரு இணக்கப்பட்டு அரசியலை விரும்புகின்ற கட்சி. நாம் தொடர்ந்து ஜனாதிபதியின் எண்ணங்களுக்கு, செயல் வடிவம் கொடுக்கக் கூடிய ஏற்பாடுகளுடன் தொடர்ந்தும் நாம் அரசாங்கத்துடன் இணைந்து பயணிப்போம் என்றார்.

பெரியபோரதீவு நிருபர்

No comments:

Post a Comment