நீண்ட காலமாக நிலவி வரும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர் சேவையிலுள்ளவர்களின் சம்பள முரண்பாட்டுப் பிரச்சினையை அரசாங்கம் தீர்த்து வைக்க வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
1997ஆம் ஆண்டு பீ.சி பெரேரா சம்பள ஆணைக்குழுவின் அறிக்கைகள் ஊடாக ஆசிரியர்களின் சம்பளத்தில் முரண்பாடு உண்டு என்ற விடயம் தெளிவாக கூறப்பட்டுள்ளது. ஆணைக்குழு அறிக்கையின் பிரகாரம் அரசாங்கம் அரச சேவையிலுள்ள ஏனையவர்களது சம்பளத்தை அதிகரித்துள்ள போதிலும், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களது சம்பள உயர்வு பின்னர் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
பல வருடங்களாக ஆசிரியர்கள், அதிபர்கள் தங்களது சம்பள முரண்பாட்டுப் பிரச்சினை தொடர்பாக போராட்டங்களை நடத்தி வந்துள்ளனர் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பிரியந்த பெர்னாந்து அன்மையில் அநுராதபுரத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது தெரிவித்தார்.
2007ஆம் ஆண்டு அதிகளவிலான ஆசிரியர்கள் இலங்கை பூராவும் எதிர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்டது மட்டுமின்றி, உயர்தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகளில் இருந்தும் முழுமையாக ஒதுங்கியிருந்தனர்.
அதன் பிறகு ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணிகளை புறக்கணிக்காது அப்பணியினை முன்னெடுக்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டதுடன், இச்சம்பள முரண்பாட்டினை நீக்கி மிக அவசரமாக தீர்வொன்றினை பெற்றுக் கொடுப்பதற்குத் தேவையான நடவடிக்கையை எடுக்கும்படி அரசாங்கத்திற்கு அறிவித்தது.
நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து அமைச்சரவை உபகுழுவொன்று தாபிக்கப்பட்டு அதன் மூலம் தீர்வொன்று எடுக்கப்பட்டது. ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு சம்பள முரண்பாடு உண்டு என்ற விடயம் உபகுழுவினால் ஏற்றுக் கொள்ளப்பட்டதுடன், இடைக்கால சம்பளம் ஒன்றினை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
2009 ஆம் ஆண்டு ஜனாதிபதி நிதி அமைச்சர் என்ற வகையில் ஆசிரியர், அதிபர்களது சம்பள முரண்பாட்டைத் தீர்ப்பதற்கு 6000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்குவதாக கூறி அத்தொகையினை ஒதுக்கிய போதிலும், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்படவில்லை.
அன்றைய அரசாங்க காலத்தில் சம்பளத்தை அதிகரிக்காது காலம் கடத்தப்பட்டது. கடைசியாக புதிய சேவையொன்றை தாபித்து, புதிய யாப்பொன்றும் (நவ சேவா விவஸ்தாவக் சகஸ்கறளா) தயாரித்து தீர்வொன்று பெற்றுத் தரப்படும் என கூறப்பட்டது. ஆனால் சம்பள அதிகரிப்பு வழங்கப்படவில்லை.
நல்லாட்சி அரசாங்க ஆட்சிக் காலத்தில் ஆசிரியர்கள், அதிபர்கள் முழு இலங்கையிலும் முதல் முறையாக வேலைநிறுத்த போராட்டமொன்றுக்கு சென்றனர். ஆசிரியர்கள் சகல பாடசாலைகளையும் மூடி கடமையில் இருந்து ஒதுங்கியிருந்தனர்.
அதன் பிறகு நல்லாட்சி அரசாங்கம் இடைக்கால சம்பளமொன்றை வழங்குவதற்கு ஆசிரியர் சங்கங்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி ஒரு உடன்பாட்டுக்கு வந்த்து. அவ்வுடன்பாட்டிற்கு அமைய ஆசிரியர்கள் மற்றும் அதிபர் சேவையிலுள்ளவர்களுக்கு இடைக்கால சம்பளத்தினை வழங்கும்படி அரசாங்கத்திடம் பல தடவைகள் நாம் கூறினோம்.
அரசாங்கம் அதற்கு எந்த விதமான நடவடிக்கைகளையும் எடுக்காமல் இருக்கின்றது. மார்ச் மாதம் 20 ஆம் திகதி சம்பளத்துடன் ஆசிரியர்கள், அதிபர்களுக்கான இடைக்கால சம்பளத்தை அரசாங்கம் வழங்காவிட்டால் சகல ஆசிரியர் சங்கங்களையும் இணைத்துக் கொண்டு நாடு தழுவிய தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவோம்” என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பிரியந்த பிரணாந்து மேலும் தெரிவித்தார்.
ஆதம்பாவா பிர்தெளஸ்
(அநுராதபுரம் நிருபர்)
No comments:
Post a Comment