குடிநீர் இணைப்பு வழங்கப்படாத பிரதேசங்களுக்கு குடிநீர் வழங்கும் பொறுப்பு எமது அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளது : அமைச்சர் சனத் நிஷாந்த - News View

About Us

About Us

Breaking

Monday, February 15, 2021

குடிநீர் இணைப்பு வழங்கப்படாத பிரதேசங்களுக்கு குடிநீர் வழங்கும் பொறுப்பு எமது அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளது : அமைச்சர் சனத் நிஷாந்த

இன, மத, மொழி, கட்சி, குல வேறுபாடின்றி குடிநீர்ப் பிரச்சினையை முகங்கொடுக்கும் அனைத்து பிரஜைகளுக்கும் குடிநீரை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கிராமிய மற்றும் பிரதேச குடிநீர் வழங்கல் திட்ட அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நேற்று (14) நடைபெற்ற குடிநீர் பிரச்சினைகளை ஆராயும் நடமாடும் சேவையில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், எதிர்வரும் 5 வருடங்களில் இதுவரை குடிநீர் இணைப்பு வழங்கப்படாத பிரதேசங்களுக்கு குடிநீர் வழங்கும் பொறுப்பு எமது அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது ஒரு சவால்மிக்க விடயமாகும். இருப்பினும் அச்சவாலினை பொறுப்பேற்று மக்களது தேவைகளை நிறைவேற்ற நாம் உரிய செயற்பாடுகளை திட்டமிட்டு மேற்கொண்டுவருகின்றோம். 

இம்மாவட்டத்தின் சில பிரதேசங்களில் அதிக சிறுநீரக நோயாளிகள் உள்ளனர். இதற்கு மூல காரணம் தூய குடிநீர் இல்லையென்று மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள கூறினார். எனவே இதனை முக்கிய விடயமாக கருத்திற்கொண்டு உரிய குடிநீர் வழங்கல் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். மக்கள் குறித்த பிரச்சினைகளை தமக்கு உரிய மாவட்ட அரசியல் தலைமையின் சிபாரிசுடன் முன்வைக்கவும். அதற்கான நிதியை தான் பெற்றுத் தருகின்றேன்.

தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்களம் மூலம் குடிநீர் வசதியற்ற கிராமங்களின் குடிநீர்த் தேவை எதிர்காலத்தில் கட்டம் கட்டமாக நிறைவேற்றப்படும். மக்கள் வழங்கப்படும் குடிநீர் வழங்கல் திட்டத்தை பொறுப்புடன் பராமரித்தல் வேண்டும். அவற்றை முறையாக உரிய அதிகாரிகள் கண்காணித்தல் வேண்டும். 

கடந்த காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட பல குடிநீர் வழங்கல் திட்டம் முறையான திட்டம் மற்றும் பராமரிப்பின்மையால் தற்போது செயல் இழந்து காணப்படுகின்றது. இது எவ்வித ஆய்வுகள் இன்றி உடன் கடந்த அரசாங்கத்தில் ஏற்படுத்தப்பட்டதன் பிரதிபலனே. 

மக்களின் பணத்தில் நிர்மாணிக்கப்படும் இத்திட்டங்கள் மக்களுக்கு பயனுள்ளதாக அமைதல் இன்றியமையாதது என்று இதன்போது இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இதன்போது மக்கள் குடிநீர்ப் பிரச்சினை தொடர்பான பல விடயங்களை இதன்போது அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர். இவை யாவும் ஆராயப்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று இதன்போது மக்களிடம் அமைச்சர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவருமான கபில நுவன் அத்துக்கோரள , அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள , பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்களும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment