சீனத் திட்டத்தால் இந்தியா இலங்கைக்கு அதிரடியாக அறிவித்தது என்ன ? - News View

About Us

About Us

Breaking

Sunday, February 7, 2021

சீனத் திட்டத்தால் இந்தியா இலங்கைக்கு அதிரடியாக அறிவித்தது என்ன ?

(லியோ நிரோஷ தர்ஷன்)

வடக்கில் மூன்று தீவுகளை உள்ளடக்கிய புதுப்பிக்கத்தக்க இரட்டை ரக சக்தி திட்டத்தினை சீனாவுடன் இணைந்து இலங்கை முன்னெடுக்கவுள்ளமையானது இந்தியாவின் தேசிய பாதுகாப்புடன் நேரடியாக தொடர்புபடுவதாக டெல்லி கொழும்பிற்கு அறிவித்துள்ளது.

இவ்வாறானதொரு திட்டமொன்று முன்னெடுக்க ஒத்துழைப்பை கோரியிருந்தால் நிச்சயமாக இந்தியா முழு அளவில் இலங்கைக்கு அதனை வழங்கியிருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் கொழும்பின் தற்போதைய நகர்வுகள் குறித்து டெல்லி கூர்மையாக அவதானித்து வருகின்ற நிலையில் வடக்கில் நெடுந்தீவு, அனலைதீவு மற்றும் நைனாதீவு ஆகிய மூன்று தீவுகளை உள்ளடக்கிய புதுப்பிக்கத்தக்க சக்தி திட்டத்தினை சீனாவுடன் இணைந்து இலங்கை முன்னெடுக்கவுள்ளது.

இதற்கான அமைச்சரவை அனுமதி ஜனவரி 17 ஆம் திகதி அமைச்சரவை கூட்டத்தின் போது சமர்பிக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டுள்ளது.

இந்த அமைச்சரவை அனுமதிக்கமைவாக சினோசோர் ஈடெக் வின் என்ற நிறுவனத்திற்கு வழங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த தீவுகளில் புதுப்பிக்கத்தக்க இரட்டை ரக சக்தி திட்டத்தினையே முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இந்த விடயம் தொடர்பில் ஏறற்கனவே டெல்லி கவனம் செலுத்தியிருந்த நிலையில் மேற்படி 3 தீவுகளில் முன்னெடுக்கப்படவுள்ள திட்டமானது இந்திய பாதுகாப்பு விடயத்தில் தாக்கம் செலுத்துவதாக கொழும்பிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் இராமேஸ்வரத்திலிருந்து வெறும் 30 கடல் மைல் தொலைவிலேயே (48 கிலோ மீற்றர்) நெடுந்தீவு அமைந்துள்ளதை சுட்டிக்காட்டியிருக்கும் டெல்லி, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கையில் முன்னெடுக்கப்படும் அந்நிய நாடுகளின் திட்டங்கள் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு விடயத்தில் தாக்கம் செலுத்தி விட கூடாது என்பதில் மிக அக்கறையுடன் செயற்படுமாறு வலியுறுத்தியுள்ளது.

இதுவரை காலமும் இரு தரப்பாலுமே இந்த விடயம் கவனத்தில் கொள்ளப்பட்டிருந்த நிலையில் நெடுந்தீவு, அனலைதீவு மற்றும் நைனாதீவு ஆகிய மூன்று தீவுகளை உள்ளடக்கிய புதுப்பிக்கத்தக்க இரட்டை ரக சக்தி திட்டத்தினை சீனாவுடன் இணைந்து முன்னெடுக்கின்றமை நேரடியாகவே இந்தியாவின் தேசிய பாதுகாப்பு விடயத்தில் தாக்கம் செலுத்தும் என்பதை கொழும்பிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த திட்டத்தை இலங்கை மீள் பெற்றுக் கொள்வதாக இல்லை. அதேபோன்றுதான் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய விடயத்திலும் ஒருதலைப்பட்சமாக செயற்பட்டு ஒப்பந்தத்தை இரத்து செய்துள்ளது.

இவ்வாறு பல விடயங்களில் ஏற்படக் கூடிய கசப்பான உணர்வுகள் இரு தரப்பிற்கிடையிலும் காணப்படக் கூடிய நல்லுறவில் விரிசல் நிலையை ஏற்படுத்தலாம் என இராஜதந்திரிகள் சுட்டிக் காட்டுகின்றனர்.

No comments:

Post a Comment