எம்மீது குற்றம் சுமத்துவது போன்றுள்ள உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை அறிக்கையை ஜனாதிபதி இரத்து செய்ய வேண்டும் - சிங்கள ராவய அமைப்பு - News View

Breaking

Post Top Ad

Tuesday, February 23, 2021

எம்மீது குற்றம் சுமத்துவது போன்றுள்ள உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை அறிக்கையை ஜனாதிபதி இரத்து செய்ய வேண்டும் - சிங்கள ராவய அமைப்பு

(நா.தனுஜா)

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கையில், தேசிய ரீதியான அமைப்புக்கள் மற்றும் இயக்கங்களின் உருவாக்கமே சஹ்ரான் போன்றவர்களின் செயற்பாடுகளுக்குத் தூண்டுதலாக அமைந்ததாக கூறப்பட்டிருப்பதாக அறிய முடிகின்றது. இந்த அறிக்கை எம்மீது குற்றம் சுமத்துவது போன்றே தோன்றுகிறது. ஜனாதிபதி இந்த நியாயமற்ற அறிக்கையை இரத்துச் செய்துவிட்டு, வெற்றிகரமாக செயற்படக்கூடிய குழுவொன்றின் ஊடாக ஆராய்ந்து விசாரணை அறிக்கையை வெளியிட வேண்டும் என்று சிங்கள ராவய அமைப்பின் தலைவர் ஹக்மீமன தயாரத்ன தேரர் தெரிவித்தார்.

கொழும்பில் செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது. 

அங்கு அவர் மேலும் கூறியதாவது உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கையில், தாக்குதலுடன் தொடர்புபட்டவர்களைத் தண்டிப்பதற்கான பரிந்துரைகள் முன்வைக்கப்படும் என்று எதிர்பார்த்தோம்.

எனினும் தேசிய ரீதியான அமைப்புக்கள் மற்றும் இயக்கங்களின் உருவாக்கமே சஹ்ரான் போன்றவர்களின் செயற்பாடுகளுக்கு தூண்டுதலாக அமைந்ததாக அவ்வறிக்கையில் கூறப்பட்டிருப்பதாக அறிய முடிகின்றது.

கடந்த காலத்தில் மாவனல்லையில் புத்தர் சிலை உடைக்கப்பட்ட போதும் வனாத்தவில்லு பகுதியில் ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்ட போதும் நாம் பலமுறை எச்சரித்திருந்தோம்.

எனினும் அதனுடன் தொடர்புபட்டிருப்பதாகக் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்குமாறு அஸாத் சாலியினால் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டதாக அப்போதைய பிரதிப் பொலிஸ்மா அதிபர் தெரிவித்திருந்தார். அந்தச் சம்பவங்களுடன் தொடர்புபட்டவர்களே உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களில் ஈடுபட்டிருந்தனர்.

எனவே அறிக்கையின் பிரகாரம் அஸாத் சாலி போன்றவர்கள் குற்றவாளிகளாக அறிவிக்கப்படுவார்கள் என்று கருதினோம். எனினும் அத்தகைய உள்ளடக்கங்கள் இருப்பதாக அறிய முடியவில்லை.

எமக்குக் கிடைத்த தகவல்களின்படி மேற்படி விசாரணை அறிக்கையில் உள்ளடக்கங்கள் எமக்குப் பெரிதும் அதிருப்தியளிப்பவையாகவே உள்ளன. அடிப்படைவாதக் குழுவினர் இணைந்தா இந்த அறிக்கையைத் தயாரித்தார்கள் என்ற கேள்வியும் தற்போது எழுகின்றது. ஏனெனில் இதில் எம்மைக் குற்றவாளிகளாக சித்தரிக்கும் போக்கு காணப்படுவதாகவே தெரிகின்றது.

நாம் சஹ்ரான் போன்றவர்களின் செயற்பாடுகளை ஆராய்வதற்கும் எதிர்ப்பதற்குமே தேசிய ரீதியில் அமைப்புக்களை நிறுவினோம். எனவே ஜனாதிபதி இந்த நியாயமற்ற அறிக்கையை இரத்துச் செய்துவிட்டு, வெற்றிகரமாக செயற்படக்கூடிய குழுவொன்றின் ஊடாக ஆராய்ந்து விசாரணை அறிக்கையை வெளியிட வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad