நாட்டின் அபிவிருத்திக்கு இன நல்லிணக்கம் அத்தியாவசியமானதொன்று. அதனை தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க பணியகம் சிறந்த முறையில் மேற்கொள்ளும் என்ற நம்பிக்கை இருக்கின்றது என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ்வினால் பெயரிடப்பட்டிருந்த தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க பணியகத்தின் உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை நீதி அமைச்சில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டில் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது காலத்தின தேவையாகும். பல இனத்தவர்கள் மற்றும் மதத்தவர்கள் மத்தியில் தேசிய ஐக்கியம் நல்லிணக்கம் நாட்டின் அபிவிருத்திக்கு மிக முக்கியமானது.
தேசிய ஒற்றுமை மற்றும் இன நல்லிணக்கத்தை நோக்கிச் செல்லுவது இலகுவான விடயமல்ல. அதனால் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க பணியகத்தின் புதிய தலைவர் மற்றும் பணிப்பாளர் சபையினால் அதற்காக அவர்களால் முடிந்த பூரண ஆதரவை வழங்கும் என்ற நம்பிக்கை இருக்கின்றது என்றார்.
12 பேர் கொண்ட இந்த பணியகத்தின் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி குஷான்த சில்வா நியமிக்கப்பட்டுள்ளதுடன் பணிப்பாளர் நாயகமாக சுனில் கன்னங்கர நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் சிறுபான்மை சமூகத்தில் இருந்து கலாநிதி ரிஸ்வி ஹசன், சட்டத்தரணி சுகந்தி விஜயசூரிய கதிர்காமர், மனோசேகரம், அப்ஸால் மரிக்கார் மற்றும் செந்தில் தொண்டமான் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment