1000 ரூபா சம்பள அதிகரிப்பு பேச்சுவார்த்தை : கம்பனிகள் சார்பில் ஒருவர் மாத்திரமே பங்கேற்பு : திகதி தீர்மானிக்கப்படாமல் ஒத்திவைப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, February 19, 2021

1000 ரூபா சம்பள அதிகரிப்பு பேச்சுவார்த்தை : கம்பனிகள் சார்பில் ஒருவர் மாத்திரமே பங்கேற்பு : திகதி தீர்மானிக்கப்படாமல் ஒத்திவைப்பு

(எம்.மனோசித்ரா)

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பள அதிகரிப்பு தொடர்பான பேச்சுவார்த்தை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நேற்று கூடிய சம்பள நிர்ணய சபையில் கம்பனிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் கலந்துகொள்ளாததன் காரணமாக திகதி தீர்மானிக்கப்படாமல் பேச்சுவார்த்தை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் தொழில் ஆணையாளர் தலைமையில் கூடிய, சம்பள நிர்ணய சபையில் பெருந்தோட்ட தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 8 தொழிற்சங்களும், அரசாங்கத்தின் மூன்று பிரதிநிதிகளும், கம்பனிகள் சார்பில் ஒருவர் மாத்திரமே கலந்துகொண்டதால் இவ்வாறு பேச்சுவார்த்தை பிற்போடப்பட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சம்பள நிர்ணயசபை உறுப்பினர் மாரிமுத்து தெரிவித்தார்.

சம்பள நிர்ணய சபை கூடுவதற்கு குறைந்தபட்ச உறுப்பினர்கள் எண்ணிக்கை 5 ஆகும். இதில் இருவர் தொழிற்சங்க பிரதிநிதிகளாகவும், மேலுமிருவர் கம்பனி பிரதிநிதிகளாகவும் ஏனையவர் அரசாங்க பிரிதிநிதியாகவும் காணப்படுவார்.

எனினும் நேற்றையதினம் கம்பனி சார்பில் ஒருவர் மாத்திரமே கலந்து கொண்டிருந்ததாகவும், அதனால் தொழில் அமைச்சர் நிமல்சிறிபால டி சில்வாவுடன் கலந்துரையாடி அடுத்த பேச்சுவார்த்தை தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் என்றும் மாரிமுத்து மேலும் தெரிவித்தார்.

நேற்றைய பேச்சுவார்த்தையில் 8 தொழிற்சங்கள் பிரதிநிதிகளும், 3 அரசாங்க பிரதிநிதிகளும் கலந்துகொண்டிருந்த போதிலும் கம்பனிகள் சார்பில் ஒருவர் மாத்திரமே கலந்து கொண்டிருந்ததால் இவ்வாறு பேச்சுவார்த்தையை ஒத்தி வைக்க வேண்டி ஏற்பட்டதாக சம்பள நிர்ணய சபையின் உறுப்பினரும் விவசாய தோட்ட தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான ஆர்.எம்.கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுடன் கலந்தாலோசித்து, கம்பனிகளுக்கு அறிவித்தல் விடுத்த பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தொழிற்சங்கங்களுக்கு அறிவிப்பதாக தொழில் ஆணையாளர் தெரிவித்ததாகவும் ஆர்.எம்.கிருஷ்ணசாமி மேலும் தெரிவித்தார்.

இம்மாதம் 8 ஆம் திகதி பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபாய் அடிப்படை சம்பளம் குறித்து தீர்மானிப்பதற்காக கொழும்பிலுள்ள தொழில் அமைச்சில் தொழில் ஆணையாளர் தலைமையில் சம்பள நிர்ணய சபை கூடியது.

இதன்போது 900 ரூபா அடிப்படை சம்பளம், 140 ரூபா வாழ்க்கை செலவு புள்ளிக்கு ஏற்ற கொடுப்பனவும் மொத்தமாக 1040 ரூபா உறுதிப்படுத்தப்பட்டது. இருந்த போதிலும் அரசாங்கத்தின் யோசனை மற்றும் தீர்மானங்களுக்கு கம்பனிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தன.

சம்பள பிரச்சினை சம்பள நிர்ணய சபைக்கு கொண்டு செல்லப்பட்டதால் கூட்டு ஒப்பந்தம் வலுவிழந்துவிட்டதாக கம்பனிகள் சுட்டிக்காட்டியிருந்த அதே வேளை, இங்கு தொழிலாளர்களின் ஏனைய நலன்கள் கேள்விகுட்படுத்தப்பட்டிருந்தது.

இந்ந சிக்கல் நிலைமை மற்றும் வாக்கெடுப்பில் தீர்மானிக்கப்பட்ட சம்பள அதிகரிப்பு விவகாரம் ஆகியவை தொடர்பில் தொழிற்சங்கங்களும் முதலாளிமார் சம்மேளனமும் 14 நாட்களுக்குள் தமது சட்ட ரீதியான ஆட்சேபனைகளை முன்வைக்க முடியும் என்று தொழில் ஆணையாளர் அறிவித்தார்.

அதற்கமைய குறித்த காலப்பகுதிக்குள் 162 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தொழில் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.

தொழில் ஆணையாளரால் அறிவிக்கப்பட்டு இரு வார காலங்களில் தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து 148 முறைப்பாடுகளும், இறப்பர் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து 14 முறைப்பாடுகளும் கிடைக்கப் பெற்றுள்ளன.

இவற்றில் அதிகமான முறைப்பாடுகள் சிறு தோட்ட உரிமையாளர்களினால் முன்வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் பெருந்தோட்ட நிறுவனங்கள் மற்றும் முதலாளிமார் சம்மேளனம் சார்பிலும் முரண்பாடுகளை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment