நிதி மோசடி தொடர்பில் கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்ட ETI பணிப்பாளர்கள் நால்வரும் மீண்டும் CID யினால் கைது - News View

Breaking

Post Top Ad

Friday, January 8, 2021

நிதி மோசடி தொடர்பில் கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்ட ETI பணிப்பாளர்கள் நால்வரும் மீண்டும் CID யினால் கைது

ETI நிதி நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர்கள் நால்வரும் மீண்டும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் (CID) கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரூபா 13.7 பில்லியன் வைப்பீட்டை சட்டவிரோதமாக பெற்றதன் மூலம் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்ட ஜீவக எதிரிசிங்க, தீபா அஞ்சலி எதிரிசிங்க, அசங்க எதிரிசிங்க, நாலக எதிரிசிங்க ஆகிய குறித்த சந்தேகநபர்களையும் கைது செய்யுமாறு, சட்டமா அதிபர் வழங்கிய ஆலோசனைக்கு அமைய இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, சட்டமா அதிபரின் இணைப்பதிகாரி, அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து குறித்த நால்வரையும் மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், DIG அஜித் ரோஹண தெரிவித்தார்.

குறித்த நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் கைதான நால்வரையும் விடுவித்தமை தொடர்பில், சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தங்களது விமர்சனங்களை வெளியிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ETI நிதி நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட நிதி முறைகேடு, மோசடி, பண தூய்மையாக்கம், நம்பிக்கை மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அந்நிறுவனத்தின் பணிப்பாளர்கள் மீது குற்ற விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சட்ட மாஅதிபரினால் கடந்த செவ்வாய்க்கிழமை (05) குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது.

அதற்கமைய, குறித்த நால்வரில் மூவர் கடந்த செவ்வாய்க்கிழமை (05) கைது செய்யப்பட்ட நிலையில், நான்காமவர் நேற்றுமுன்தினம் (06) CIDயில் சரணடைந்திருந்தார்.  

இதனைத் தொடர்ந்து சந்தேகநபர்கள் நால்வரும், கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு, தலா ரூபா 10 இலட்சம் இரு சரீரப் பிணைகளில் நேற்றுமுன்தினம் (06) விடுவிக்கப்பட்டிருந்தனர்.

அத்துடன், குறித்த சந்தேகநபர்களுக்கு வெளிநாடு செல்லத் தடை விதித்த நீதவான், அவர்களது கடவுச்சீட்டுகளை இரத்து செய்யுமாறும் உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜா பிரேமரத்ன, நீதிமன்றை தவிர்க்கும் வகையிலான எந்தவிதமான ஏய்ப்பும் மேற்கொள்ளவில்லை எனத் தெரிவித்ததோடு, பிணை வழங்கக் கூடிய குற்றமென சுட்டிக்காட்டியதோடு, எந்தவொரு நிபந்தனையிலும் பிணை வழங்குமாறும் கேட்டுக்கொண்டார்.

குறித்த நிறுவனத்தின் உரிமையாளரான காலஞ்சென்ற சோமா எதிரிசிங்க உள்ளிட்ட அவரது நான்கு பிள்ளைகளான சந்தேகநபர்கள், சுமார் 23,000 வைப்பாளர்களை மோசடி செய்ததாகவும், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சொத்துக்களை கொள்வனவு செய்து தங்கள் சொகுசிற்காக பயன்படுத்தியதாகவும் சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலிப பீரிஸ் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

ETI நிறுவனம், மத்திய வங்கியில் பதிவு செய்யப்பட்ட நிறுவனமாக இருந்தபோதிலும், அது சட்டவிரோதமாக ரூ. 6.480 பில்லியனையும், ஸ்வர்ணமஹால் நகையகத்தின் மூலம் நகை விற்பனை செய்த போர்வையில் சட்டவிரோத கணக்கில் ரூ. 7.2 பில்லியனையும் வரவு வைத்துள்ளதன் மூலம் ரூ. 13.7 பில்லியன் நிதியை மோசடி செய்தள்ளதாக திலீப பீரிஸ் மன்றில் தெரிவித்திருந்தார்.

சந்தேகநபர்கள் படகு மூலம் வெளிநாட்டிற்கு தப்பிச் செல்ல முற்படலாம் என்றும், இந்த சம்பவம் தொடர்பாக பொதுமக்களிடையே சலசலப்பு ஏற்படலாம் எனவும் தெரிவித்த திலீப பீரிஸ், அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டால் இந்நிலை மேலும் மோசமடையலாம் என்றும் அவர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.

ஆயினும் குறித்த வாதங்களை மறுத்த, பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜா பிரேமரத்ன சந்தேகநபர்களுக்கு பிணை வழங்குமாறு கோரிக்கை முன்வைத்தார்.

மிக நீண்ட வாதப் பிரதிவாதங்களை செவிமடுத்த நீதவான், இச்சந்தேக நபர்கள் முறையாக நீதிமன்றத்திற்கு வந்துள்ளனர். பொதுமக்கள் சலசலப்பு ஏற்பட்டதாகத் தெரியவில்லை. முறைப்பாட்டாளர்கள் கொந்தளிப்பான நிலையில் இருப்பதாகத் தெரிகிறது. சந்தேகநபர்கள் படகில் தப்ப முயற்சித்திருந்தால், கடந்த மூன்று ஆண்டுகளில் செல்ல வாய்ப்பு இருந்திருக்கும். சொத்து கொள்வனவு செய்யப்பட்டதாக புலனாகவில்லை. எனவே பிணையை மறுக்க போதுமான ஆதாரங்கள் இல்லாததால் அவர்கள் நால்வருக்கு பிணை வழங்குவதாக நீதவான் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad