உங்கள் தலைவர் ரணிலை ‘சேர் சேர்’ என அழைத்தோர் இன்று ‘மிஸ்டர் பீன்’ என அழைக்கின்றனர் - ரஞ்சன் வாய் காரணமாக சிறைக்குச் சென்றுள்ளார் : அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே - News View

Breaking

Post Top Ad

Monday, January 25, 2021

உங்கள் தலைவர் ரணிலை ‘சேர் சேர்’ என அழைத்தோர் இன்று ‘மிஸ்டர் பீன்’ என அழைக்கின்றனர் - ரஞ்சன் வாய் காரணமாக சிறைக்குச் சென்றுள்ளார் : அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே

‘சேர் சேர்’ என ஒரு காலத்தில் அழைத்த உங்கள் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை இன்று ‘மிஸ்டர் பீன்’ என அழைக்கின்றனர். அதனால் ‘சார்லி சாப்லின்’ பற்றி எதிர்க் கட்சியினர் கூறும் கருத்துகளை பொருட்படுத்த மாட்டோமென விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில், பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்கவால் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். 

அவர் மேலும் தெரிவித்தாவது, அரசாங்கத்தின் தேவைக்கோ, பிரதமரின் தேவைக்கோ அல்லது ஜனாதிபதியின் தேவைக்கோ ரஞ்சன் ராமநாயக்க சிறைக்குச் செல்லவில்லை. ரஞ்சன் சிறைக்குச் சென்றுள்ளதால் அரசாங்கத்தால் என்ன செய்ய முடியும். எம்மால் ஒன்றும் செய்ய முடியாது. 

எமது நாட்டின் நீதித்துறை ஊழல் மிக்கதெனவும், சட்டத்தரணிகளை திருடர்கள் எனவும், உயர் நீதிமன்றம் முதல் அனைத்து நீதிமன்றங்களும் ஊழல் மிக்கதென்றார். நீதிமன்றத்தை ஊழல் மிக்கதென கூறியதால் சிறைக்கு அனுப்பட்டவருக்கு கறுப்பு சால்வை அணியும் ஒரே கட்சி எதிர்க்கட்சிதான். 

ரஞ்சன் ராமநாயக்க எமக்குச் சொந்தமான வாகன அனுமதிப்பத்திரத்தை இரண்டு பேருக்கு விற்பனை செய்துள்ளார். இரத்தினபுரி பொலிஸ் நிலையத்தில் அதற்கான முறைப்பாடு உள்ளது. ஒரு அனுமதிப்பத்திரத்தை இரண்டு பேருக்கு விற்பனை செய்த ஒரே பாராளுமன்ற உறுப்பினர் அவர்தான். 

கண்டியில் காந்தி என்ற ஆசிரியையை திருமணம் செய்வதாக பத்து இலட்சம் பெற்றுக் கொண்டு அவரை ஏமாற்றியுள்ளதாக கண்டி நீதிமன்றில் வழக்கொன்று உள்ளது. 

தெல்தெனியவில் ஒரு ஹோட்டலில் சினிமா கதையையொன்று படம்பிடித்துவிட்டு 17 இலட்சம் ரூபாவை கொடுக்காது ஏமாற்றியுள்ளார். ஆனால், எதிர்க்கட்சியினர் உண்மைக்காக போராடியதால் ரஞ்சன் சிறைக்குச் சென்றுள்ளதாக பாராளுமன்றில் கோசமிடுகின்றனர். 

ரஞ்சனின் வாய் காரணமாகவும் ஐக்கிய தேசிய கட்சி காரணமாகவும் அவர் சிறைக்குச் சென்றுள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் முழு அமைச்சரவையும் பொறுப்புக்கூற வேண்டும். இன்று சபையில் கறுப்பு சால்வை அணிந்திருக்கும் ஹரின் பெர்ணான்டோவும் பொறுப்புக்கூற வேண்டும். 

ஆகவே, நீதிபதிகளுக்கும், ஊழல் மோசடி பிரிவுக்கு வழக்குகள் தொடர்பில் அழுத்தம் கொடுத்தவருக்காகவும் புனிதமான பாராளுமன்றில் கறுப்புச் சால்வையை அணிவதால் நாம் கவலையடைகிறோம். .

சுப்பிரமணியம் நிஷாந்தன்

No comments:

Post a Comment

Post Bottom Ad