காபூலில் இன்று காலை துப்பாக்கி ஏந்தியவர்கள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஆப்கான் உயர் நீதிமன்றின் இரு பெண் நீதிபதிகள் உயிரிழந்துள்ளனர்.
இரு நீதிபதிகளும் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நீதிமன்ற வாகனத்தில் தங்கள் அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்தபோது இந்த தாக்குதல் நடந்துள்ளதாக நீதிமன்ற செய்தித் தொடர்பாளர் அஹ்மத் பாஹிம் கவீம் தெரிவித்தார்.
துரதிர்ஷ்டவசமாக இந்த தாக்குதலின் விளைவாக இரு பெண் நீதிபதிகளை இழந்து விட்டோம் என்று குறிப்பிட்ட பாஹிம் கவீம், சம்பவத்தில் வாகனத்தின் சாரதி காயமடைந்துள்ளதாகவும் கூறினார்.
நாட்டின் உயர் நீதிமன்றத்தில் பணிபுரியும் 200 க்கும் மேற்பட்ட பெண் நீதிபதிகளில் அவர்கள் இருவரும் அடங்குவதாக நீதிமன்ற செய்தித் தொடர்பாளர் சுட்டிக்காட்டினார்.
இந்த தாக்குதலை காபூல் பொலிசாரும் உறுதிப்படுத்தியுள்ளதுடன், உயிரிழந்த இரு பெண்களும் உயர் நீதிமன்றத்தில் பணிபுரியும் நீதிபதிகள் என்பதை ஆப்கான் சட்டமா அதிபர் திணைக்களத்தின் செய்தித் தொடர்பாள் ஜம்ஷித் ரசூலியும் உறுதிப்படுத்தினார்.
எனினும் துப்பாக்கிச் சூட்டினை யார் முன்னெடுத்தார்கள் என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
அண்மைய மாதங்களில் ஆப்கானிஸ்தான் முழுவதும் வன்முறை அதிகரித்துள்ளது, குறிப்பாக காபூலில், உயர்மட்ட நபர்களைக் குறிவைத்து கொலை செய்யும் புதிய போக்கு அச்சத்தையும் குழப்பத்தையும் விதைத்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் தனது படைகளின் அளவை 2,500 ஆகக் குறைத்துள்ளதாக பென்டகன் அறிவித்த இரண்டு நாட்களுக்குப் பின்னர் அண்மைய தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment