எம்.என்.எம்.யஸீர் அறபாத் - ஓட்டமாவடி.
இன்று பலருக்கும் கசப்பானதொரு விடயமாக உண்மை இருக்கிறது. கொரோனா தொற்றினால் மரணிப்பவர்களின் உடல்கள் அடக்கம் செய்வதால் கிருமிகள் பரவாதென்று உலகம் ஏற்றுக்கொண்ட உண்மையை இந்த நாட்டு ஆட்சியாளர்களால் இன்னும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
கொரோனா தொற்றினால் மரணிப்பவர்களின் உடல்களை அவர்களின் மத நம்பிக்கையின்படி அடக்குவதற்கான உரிமை முதலாவது முஸ்லிம் ஜனாஸா எரிக்கப்பட்டது முதல் இன்று வரை அதனைத்தடுத்து அடக்கம் செய்வதற்கான உரிமையை தன் சமூகத்திற்கு மாத்திரமின்றி, கிறிஸ்தவ சமூகம் உட்பட தங்களின் மத நம்பிக்கையின்படி இறந்தவர்களின் உடல்களை மண்ணில் புதைக்க வேண்டுமென விரும்பும் அனைவருக்குமாகப் போராடிக் கொண்டிருப்பவர்களுள் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் முதன்மையானவர் என்ற உண்மையும் சிலருக்கு கசப்பாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ள வேண்டியே இருக்கிறது.
ஜனாஸா எரிப்பு விவகாரம் ஆரம்பித்த போது, உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைகளையும், நிபுணர்களின் பரிந்துரைகளையும் மேற்கோள்காட்டி ஆட்சியாளர்களின் கவனத்திற்கு அறிக்கையாக வெளியிட்டார்.
அதனைத்தொடர்ந்து, இவ்விடயத்தில் மேலும் கரிசனை கொண்டு ஆளுங்கட்சியின் பிரமரிடம் பேச்சுவார்தைக்கு நேரம் கேட்டும் தனியாக நேரம் ஒதுக்கித்தர ஆட்சியாளர்கள் தயாராக இல்லாத சந்தர்ப்பத்தில் கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஜனாஸா எரிப்பு விவகாரத்தையும் உலக சுகாதார இஸ்தாபனத்தின் நிலைப்பாட்டையும் தங்களுக்கான உரிமைகளை வழங்குமாறு கோரிக்கை விடுத்தார்.
பெரும்பான்மை ஆதரவில் ஆட்சிக்கு வந்த ஆட்சியாளர்களின் காதுகளில் சிறுபான்மை குரல் ஒலிக்கவில்லை என்பது இன்றுவரை நிதர்சன உண்மையாக இருக்கிறது.
ஆனாலும், ரவூப் ஹக்கீம் அவர்களால் இவ்விடயம் தொடர்பில் உலக நாடுகளின் கவனத்தை பெறுவதற்கான பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
அதன் விளைவாக உலக சுகாதார இஸ்தாபனம், சர்வதேச மன்னிப்புச்சபை, ஐக்கிய நாடு மனித உரிமைகள் சபை போன்ற சர்வதேச அமைப்புகள் இலங்கை இவ்வாறு ஜனாஸா எரிப்பு விவகாரத்தில் பிடிவாதமாக இருப்பது தொடர்பில் நிலமைகளை விளங்கப்படுத்தி அறிக்கை வெளியிட்டது முதல் முஸ்லிம் நாட்டுத்தூதுவர்கள், முஸ்லிம் நாடுகளின் ஒன்றியம் உட்பட பல நாடுகள் ஜனாஸா அடக்கம் தொடர்பாக சாதகமாக இலங்கை பரிசீலனை செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்தது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் இவை தொடர்பாக கவனஞ் செலுத்தியிருந்தது. ஆனாலும், இவைகளை அரசாங்கம் இன்னும் கவனத்திற் கொள்ளவில்லை.
பாராளுமன்ற உரைகளில் அடிக்கடி தனக்கு கிடைத்த சந்தர்பங்களிலெல்லாம் ரவூப் ஹக்கீம் கொரோனா வைரஸ் காரணமாக மரணித்த உடல்களை அடக்கம் செய்வது தொடர்பாக வெளிநாடுகள் அனுமதியளித்தது தொடர்பாகவும், நிபுணர்கள் கருத்து போன்றவைகளை மேற்கோள்காட்டி உணர்வுபூர்வமாகப் பேசியதை நாம் பார்க்கலாம்.
பாராளுமன்ற உரையில் அதிகமாக நாட்டின் பெரும்பான்மைச் சிங்கள மக்கள் புரிந்து கொள்வதற்காகவும், சர்வதேசம் இவ்விடயங்களின் கவனஞ்செலுத்துவதற்காகவும் சிங்கள, ஆங்கில மொழிகளில் பேசியிருக்கிறார்.
ஆனாலும், பலர் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவும், தமிழில் பேசவில்லை என்பதற்காகவும் ரவூப் ஹக்கீம் எதுவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை என விமர்சிப்பதை நாம் பார்க்கலாம்.
ரவூப் ஹக்கீமைப் பொறுத்தளவில் எல்லா நடவடிக்கைகளையும் பகிரங்கமாக மற்றும் எல்லா நேரமும் ஆக்ரோசமாகப் பேசி இனவாதிகளையும், ஆட்சியாளர்களையும் ஆத்திரப்படுத்தி நடக்க வேண்டிய காரியம் தடைப்பட்டாலும் தனக்கு புள்ளி போட்டுக்கொள்ளும் முயற்சிகளை மேற்கொண்டதில்லை.
இன்று நாட்டிலேயே ஜனாஸா எரிப்புக்கெதிராக பல கண்டனங்களும், நூதனப்போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எதிர்க்கட்சிகளும், ஆளுங்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஜனாஸா எரிப்பு விவகாரம் தொடர்பில் உலக சுகாதார இஸ்தாபனத்தின் வழிகாட்டல் பின்பற்றுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றனர். ஆனாலும், இதுவரை அரசாங்கம் கவனமெடுத்ததாகத் தெரியவில்லை.
கடந்த காலங்களில் தங்களைத் முஸ்லிம்களின் தலைவர்களாகக்காட்டி சிங்கம் போன்று கர்ஜனை செய்தவர்களை இந்த அரசாங்கம் அடக்கி வைத்திருக்கும் நிலையில், நமக்காக ஒரு குரல் இன்றும் ஒலித்துக் கொண்டிருக்கிறதென்றால், அது ரவூப் ஹக்கீமின் குரல் என்பது கசப்பாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ள வேண்டிய உண்மையாகும்.
தேசிய அரசியலில் சிரேஷ்ட அரசியல்வாதியாக இன்று ஆளுங்கட்சியும் பார்க்கும் ஒரு தலைவராக ரவூப் ஹக்கீம் காணப்படுகிறார்.
கடந்த பாராளுமன்ற அமர்வில் அமைச்சர் தினேஷ் குணவர்தன கூட இதனைக்குறிப்பிட்டு ரவூப் ஹக்கீமால் ஜனாஸா எரிப்பு விவகாரமாகப் பேசியதையும் ஏற்றுக் கொண்டதைக் காணக்கூடியதாக இருந்தது.
ஆளுங்கட்சியோடு முஸ்லிம் தலைவர்கள் இருந்திருந்தால், இந்த நிலை வராதென சிலர் முணுமுணுப்பதைப் பார்க்கலாம்.
தேசிய காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் அதாவுள்ளாஹ், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் மற்றும் ஜனாதிபதியின் நம்பிக்கையைப்பெற்ற நீதியமைச்சர் அலி சப்ரி, தேசியப்பட்டியலில் தங்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்கள் என்று கருதி இடங்கொடுக்கப்பட்ட இன்னும் இரு முஸ்லிம்கள் போன்றோர்களும் இந்த அரசாங்கத்தில் இருக்கத்தக்கதாக, 20வது அரசியல் திருத்தத்திற்கு எதிர்க்கட்சியிலிருந்து ஆதரவு வழங்கிய ஆறு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவைப் பெற்றவர்கள், தங்களோடு இருப்பவர்களைப் பலப்படுத்தும் நோக்கில் ஜனாஸா அடக்க விடயத்தில் கரிசனை காட்டாத அரசாங்கம் மற்றைய முஸ்லிம் தலைவர் இருந்திருந்தால் கரிசனை காட்டியிருக்குமா? என்ற கேள்வி எழுகிறது.
இன்றைய பிரதமர் அன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் இன்று எதிர்க்கட்சியில் இருக்கும் முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகள் இருந்த போதே அலுத்கம, பேருவல சம்பவங்களோடு அதிகளவான பள்ளிவாயல்களும், வர்த்தக நிலையங்களும் தாக்கப்பட்டதை அரசாங்கம் மௌனம் காத்ததையும் மறப்பதற்கில்லை.
ஒரு சமூகத்தை அழிப்பதென்றால் அந்த சமூகத்தை அவர்களின் தலைவர்களை விட்டு தூரமாக்கினால் போதும். பின்னர், அவர்களை அழிப்பது இலகுவான காரியம். இன்று முஸ்லிம் சமூகம் திட்டமிட்ட அடிப்படையில் தங்களின் மார்க்கத் தலைமைகளையும், அரசியல் தலைமைகளையும் விட்டுப் பிரிக்கப்படுகிறது.
சமூக வலைத்தளங்களின் தங்களின் தலைமையை மிகக்காரசாரமாக முஸ்லிம் சமூகத்தில்வுள்ள சிலர் விமர்சிப்பதைப் பார்க்கலாம். இவ்வாறான விமர்சனங்கள் தற்போதைய சூழ்நிலையில் ஒற்றுமைக்கு வழிவகுக்காது, வேற்றுமையையே தோற்றுவிக்கும்.
இது எதிர்காலத்தில் தலைமைகள் மீது நம்பிக்கை இழந்த சமூகத்தைத் தோற்றுவித்து அழிவுகளை நோக்கிப் பயணிக்கும் நிலை ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது.
பொறுமையின் முக்கியத்துவம் அதிகமாகப் பேசப்பட்டு, ஒற்றுமையாகச் செயற்பட வேண்டிய சந்தர்ப்பத்தில் அதிகமாக அவசரத்தன்மைக்கு முதலிடம் கொடுத்து தங்களின் மன இச்சைப்பிரகாரம் விமர்சனங்களை முன்வைப்பதையே காணக்கூடியதாக இருக்கிறது.
இவ்விமர்சனங்கள் சமூகப் பணிகளிலிருந்து பலரையும் தூரப்படுத்தி முஸ்லிம் சமூகத்தை அழிக்க நினைக்கும் எதிகரிளுக்கு கோடாரி காம்பாகவே நம்மில் சிலர் சமூக வலைத்தளங்களில் விமர்சனம் என்ற அடிப்படையில் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது கசப்பான உண்மை.
எனவே, முஸ்லிம் சமூகம் தங்களின் மத வழிகாட்டலின்படி பொறுமையோடு நிதானமாக ஒற்றுமைப்பட்டு செயற்படும் போது தங்களை நோக்கி வரும் அனைத்துப் பிரச்சனைகளையும் வெற்றி கொள்ளலாம்.
உடன் எதுவும் நடந்து விடாது. பொறுமை அவசியம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். தங்களால் முடிந்தளவு முயற்சிகளைச் செய்பவர்களை அரசியல் தலைவராக இருந்தாலும், மார்க்கத் தலைவராக இருந்தாலும் அவர்களுக்கு உதவி செய்யாவிட்டாலும், பாராட்டும் மனமில்லை என்றாலும் விமர்சனங்களைத் தவிர்ந்து கொள்ளுங்கள். விமர்சனம் பிரிவினைக்கே வழிவகுக்கும்.
எனவே, மேற்சொன்ன விடயங்கள் கசப்பாக இருந்தாலும் உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment