அமெரிக்க பாராளுமன்ற வன்முறை எதிரொலி - போலீஸ் அதிகாரி தற்கொலை - News View

Breaking

Post Top Ad

Sunday, January 10, 2021

அமெரிக்க பாராளுமன்ற வன்முறை எதிரொலி - போலீஸ் அதிகாரி தற்கொலை

அமெரிக்க பாராளுமன்ற கட்டிடத்தில் கடந்த 7ம் திகதி வன்முறை சம்பவம் அறங்கேறியது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றி பெற்றதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் அந்நாட்டு பாராளுமன்றமான கேப்பிடல் கட்டிடத்தில் கடந்த 7ம் திகதி நடைபெற்றது.

அப்போது அந்த கட்டிடத்திற்குள் நுழைந்த குடியரசு கட்சியை சேர்ந்த தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.

பாராளுமன்ற கட்டிடத்திற்குள் டிரம்ப் ஆதரவாளர்கள் நுழைவதை தடுக்க கேப்பிடல் கட்டிட பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர்.

ஆனால், போலீசாரின் தடுப்புகளையும் மீறி கட்டிடத்திற்குள் நுழைந்த டிரம்ப் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட வழிமுறைகளை கையாண்டனர்.

இந்த வன்முறை சம்பவத்தில் போலீஸ் உட்பட மொத்தம் 5 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.

அமெரிக்க வரலாற்றில் இந்த நிகழ்வு ஒரு கருப்பு நாளாக பார்க்கப்படுகிறது. பாராளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்ற இந்த வன்முறை சம்பவம் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பல்வேறு நாடுகளும், நாடுகளின் தலைவர்களும் இந்த வன்முறை தொடர்பாக தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

இதற்கிடையில், போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த முடியாமல் போனதற்கு பொறுப்பேற்று பல அதிகாரிகள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து வருகின்றனர். மேலும், வெள்ளை மாளிகையில் உள்ள அதிகாரிகளும் தங்கள் பதவியை ராஜினாமா செய்து வருகின்றனர்.

இதற்கிடையில், பாராளுமன்ற கட்டிடமான கேப்பிடலில் வன்முறை நடைபெற்ற போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் அதிகாரிகளில் ஹாவர்ட் லைபென்குட் (51) என்ற போலீஸ் அதிகாரியும் ஒருவர்.

பாராளுமன்ற கட்டிடம் தாக்கப்பட்ட சம்பவத்தில் இருந்தே இவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில், கேப்பிடல் கட்டிட தாக்குதல் சம்பவம் நடந்து 3வது நாட்கள் கடந்த நிலையில் போலீஸ் அதிகாரி ஹாவர்ட் லைபென்குட் இன்று (10) தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

பணிக்கு செல்லாத நிலையில் வீட்டில் இருந்தபோது அவர் இன்று தற்கொலை செய்துகொண்டுள்ளதாக ’டெய்லி மெயில்’ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

பாராளுமன்ற கட்டிட வன்முறை சம்பவத்தால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த ஹாவர்ட் லைபென்குட் இந்த தற்கொலை முடிவை எடுத்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். 

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாராளுமன்ற கட்டிடத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் அதிகாரி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அமெரிக்காவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போலீஸ் அதிகாரி ஹாவர்ட் லைபென்குட் பாராளுமன்ற வன்முறையால் ஏற்பட்ட மன உளைச்சலால் தற்கொலை செய்துகொண்டிருக்கும் பட்சத்தில் இந்த வன்முறை தொடர்பான உயிரிழப்புகளின் எண்ணிக்கை 6 ஆக அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad