மாலி நாட்டில் பிரான்ஸ் படையினரின் வாகனத்தை குறி வைத்து கண்ணி வெடி தாக்குதல் - இருவர் பலி - News View

Breaking

Post Top Ad

Sunday, January 3, 2021

மாலி நாட்டில் பிரான்ஸ் படையினரின் வாகனத்தை குறி வைத்து கண்ணி வெடி தாக்குதல் - இருவர் பலி

மாலி நாட்டில் பிரான்ஸ் படையினரின் வாகனத்தை குறி வைத்து நடந்த கண்ணி வெடி தாக்குதலில் 2 வீரர்கள் உயிரிழந்தனர்.

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் அல்கொய்தா, ஐஎஸ் மற்றும் அதன் ஆதரவு பயங்கரவாத குழுக்கள் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன. 

அதுமட்டுமல்லாமல், அந்நாட்டில் 2012ம் ஆண்டு முதல் பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்கள் உருவெடுத்துள்ளன. இந்த கிளர்ச்சியாளர்கள் குழுக்கள் பயங்கரவாத குழுக்களுடன் இணைந்து பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்த பயங்கரவாத குழுக்களை ஒடுக்கும் நடவடிக்கையில் உள்நாட்டு ராணுவம் ஈடுபட்டு வருகிறது. உள்நாட்டு ராணுவம் மட்டுமல்லாமல் பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளும் மாலியில் தங்கள் ராணுவ தளங்களை அமைத்து பயங்கரவாதிகளை ஒழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். 

2015ம் ஆண்டு நவம்பர் 13ம் தேதி பிரான்ஸ் நாட்டில் ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்திய தொடர் தாக்குதலில் 130 பேர் உயிரிழந்தனர். 416 பேர் படுகாயமடைந்தனர். 

இந்த தாக்குதலை தொடர்ந்து ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு மீதான தாக்குதலை பிரான்ஸ் அதிகப்படுத்தியது. குறிப்பாக மாலி நாட்டில் செயல்பட்டு வரும் பயங்கரவாத குழுக்களை ஒழிக்கும் நடவடிக்கையில் பிரான்ஸ் களமிறங்கியுள்ளது. 

உள்நாட்டு படையுடன் இணைந்து பிரான்ஸ் படைகள் மாலியில் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இதனால், பிரெஞ்சு படைகள் மற்றும் உள்நாட்டு படைகளை குறி வைத்து பயங்கரவாதிகள் அவ்வப்போது தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மாலியின் மேனகா மாகாணத்தில் ஒரு காட்டுப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பிரெஞ்சு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலையடுத்து, பிரெஞ்சு படையினர் சிலர் தங்கள் ராணுவ வாகனத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருந்த பகுதிக்கு சென்றனர்.

படையினர் சென்ற வாகனம் காட்டுப்பகுதி அருகே சென்றபோது பயங்கரவாதிகள் சாலை ஓரத்தில் மறைத்து வைத்திருந்த கண்ணி வெடி தாக்குதலில் சிக்கியது. கண்ணி வெடி மீது படையினர் சென்ற கார் ஏறியதால் வெடித்துச் சிதறியது.

இந்த கண்ணி வெடி தாக்குதலில் பிரான்ஸ் படையை சேர்ந்த யோவோனி ஹூனா மற்றும் லுயிக் ரிஸ்சர் என்ற 2 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், சில வீரர்கள் காயமடைந்தனர். மாலியில் பயங்கரவாத தாக்குதலில் பிரெஞ்சு படையினர் 2 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு பிரான்ஸ் அரசு இரங்கல் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad