கொவிட் தொற்றாளர்கள் அதிகரித்து வரும் நாடான உக்ரைனிலிருந்து சுற்றுலாப் பயணிகளை வரவழைத்தது ஏன் - முஜிபுர் ரஹ்மான் - News View

About Us

About Us

Breaking

Saturday, January 2, 2021

கொவிட் தொற்றாளர்கள் அதிகரித்து வரும் நாடான உக்ரைனிலிருந்து சுற்றுலாப் பயணிகளை வரவழைத்தது ஏன் - முஜிபுர் ரஹ்மான்

(எம்.மனோசித்ரா)

சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதாகக் கூறி, அரசாங்கத்திற்கு நெருக்கமானவர்களின் வணிகத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளே தற்போது முன்னெடுக்கப்படுகின்றன. அதனால்தான் ஆகஸ்ட் மாதம் முதல் கொவிட் தொற்றாளர்கள் அதிகரித்து வரும் நாடான உக்ரைனிலிருந்து சுற்றுலாப் பயணிகள் வரவழைக்கப்பட்டுள்ளனர் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில், கொவிட் அச்சுறுத்தலால் கொழும்பில் பல பகுதிகள் சுமார் 2 மாத காலமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இரண்டு மாதங்களின் பின்னரும் அவற்றை தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்க முடியாத நிலையிலிருந்து கொவிட் கட்டுப்பாடு தொடர்பில் அரசாங்கம் முன்னெடுத்துள்ள செயற்பாடுகள் தோல்வியடைந்துள்ளமை தெளிவாகிறது. 

ஆரம்ப கட்டத்திலேயே பி.சி.ஆர். பரிசோதனைகளின் அளவை அதிகரித்து விரைவில் கொழும்பை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு நாம் வலியுறுத்திய போதும் அரசாங்கம் அதற்கான எவ்வித முயற்சிகளையும் முன்னெடுக்கவில்லை.

இவ்வாறான நிலைமைக்குள் சுற்றுலாத் துறையை ஆரம்பித்திருக்கிறார்கள். அதன் முதற்கட்டமாக உக்ரையினிலிருந்து சுற்றுலா பிரயாணிகள் வரழைக்கப்பட்டுள்ளனர். ஆனால் உக்ரைன் நாட்டில் பல மில்லியன் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். 

இவ்வாறு அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்படும் நாட்டிலிருந்து சுற்றுலாப் பிரயாணிகள் வரழைக்கப்படுகின்றமை முறையற்ற செயற்பாடாகும். அந்நாட்டிலிருந்து வந்தவர்களில் சிலருக்கு தற்போது தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு தொற்றுறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் தொடர்பிலும், அவர்களை தனிமைப்படுத்துவது தொடர்பிலும் அரசாங்கம் தெரியப்படுத்த வேண்டும். 

சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கு பதிலாக அரசாங்கத்திற்கு நெருக்கமானவர்களின் வணிகத்தை மேம்படுத்துவதற்கே அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

தொற்றுக்குள்ளானவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டால் அவர்களது சுற்றுலாக் காலம் நிறைவடைந்துவிடும். அவ்வாறிருக்கையில் எவ்வாறு சுற்றுலாத்துறை மேம்படும் ? 

இவ்வாறு கேள்விக்குரிய செயற்பாடுகளை முன்னெடுக்காமல் முறையாக சுற்றுலாத் துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்துகின்றோம் என்றார்.

No comments:

Post a Comment