இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவருமான சௌரவ் கங்குலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேற்குவங்காள மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்த சௌரவ் கங்குலி தனது சொந்த ஊரில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், கொல்கத்தாவில் அவரது வீட்டில் இருந்த சௌரவ் கங்குலிக்கு இன்று மதியம் 2 மணியளவில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து, அவர் உடனடியாக கொல்கத்தாவில் உள்ள உட்லேன்ட்ஸ் பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கங்குலிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சௌரவ் கங்குலி விரைவில் குணமடைய வேண்டும் என அவரது ரசிகர்களும், கிரிக்கெட் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அவருக்கு லேசான கார்டியாக் அரஸ்ட் என்று சொல்லப்படும் இதய நிறுத்தம் ஏற்பட்டுள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி தெரிவித்துள்ளார்.
ட்விட்டரில் அவர் பகிர்ந்த செய்தியில் கங்குலிக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதை கேள்விப்பட்டு வேதனைப்படுவதாக கூறியுள்ளார். அத்துடன், அவர் விரைவாக, முழுமையாக குணமடைய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தன்னுடைய வேண்டுதல்களும், யோசனையும் அவரோடும், அவரது குடும்பத்தோடும் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய செயலாளர் ஜெய் ஷா, தாம் சௌரவ் கங்குலி குடும்பத்துடன் பேசியதாகவும், சிகிச்சைக்கு கங்குலியின் உடல் நன்கு ஒத்துழைப்பதாகவும், அவர் உடல் நிலை ஸ்திரமாக இருப்பதாகவும் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment