ரஞ்சனின் பாராளுமன்ற உறுப்புரிமையை தக்க வைத்துக் கொள்ள நடவடிக்கை எடுப்போம் - ஜோன்ஸ்டனுக்கு எதிரான வழக்கு சட்ட ரீதியானதல்ல என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது : நளின் பண்டார - News View

About Us

About Us

Breaking

Saturday, January 16, 2021

ரஞ்சனின் பாராளுமன்ற உறுப்புரிமையை தக்க வைத்துக் கொள்ள நடவடிக்கை எடுப்போம் - ஜோன்ஸ்டனுக்கு எதிரான வழக்கு சட்ட ரீதியானதல்ல என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது : நளின் பண்டார

(எம்.மனோசித்ரா)

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பில் சிறைத் தண்டனைக்கு உள்ளாகும் பாராளுமன்ற உறுப்பினரின் பாராளுமன்ற உறுப்புரிமை இல்லாமல் போகும் என்பது பற்றி அரசியலமைப்பில் தெளிவான விளக்கங்கள் எதுவும் இல்லை. எனவே சட்டத்தரணிகள் ஊடாக உரிய சட்ட ஆலோசனையைப் பெற்று ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்புரிமையை தொடர்ந்தும் தக்க வைத்துக் கொள்ள ஐக்கிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுக்கும் என்று பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில், ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்புரிமை தொடர்பில் தெளிவின்மை காணப்படுகிறது. எனவே சட்டத்தரணிகளுடன் ஆலோசித்து இது குறித்து நியாயமான தீர்வொன்றை பெற்றுக் கொள்ள ஐக்கிய மக்கள் சக்தி உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கும்.

இதற்கு முன்னர் உயர் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்புக்கள் பல சில பாராளுமன்ற உறுப்பினர்களாலும், ஊடகங்களாலும், பத்திரிகைகளாலும், இணையத்தள ஊடகங்களாலும் கேள்விக்குட்படுத்தும் வகையில் செய்திகளும் கருத்துக்களும் வெளியிடப்பட்டன.

எனவே இனிவரும் காலங்களில் இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டால் அது குறித்து நாம் மிக உன்னிப்பாக அவதானித்து உரிய நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளோம்.

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்டோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் சட்ட ரீதியானதல்ல என்று கூறுகிறார்கள். அதனை ஏற்றுக் கொள்ள முடியாது. காரணம் ரஞ்சன் நாமநாயக்கவுக்கு எதிராக எமது ஆட்சிக் காலத்திலேயே வழக்கு தொடரப்பட்டது. அந்த சந்தர்ப்பத்தில் நாம் நினைத்திருந்தால் அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படுவதை தவிர்த்திருக்க முடியும். நாம் சட்டத்தை மதிப்பவர்கள் என்பதால் அதனை செய்யவில்லை. 

அவ்வாறிருக்கையில் சட்டத்துக்கு முரணாக யார் மீதும் வழக்கு தொடர வேண்டிய தேவை எமக்கு கிடையாது. ரஞ்சன் ராமநாயக்கவின் விவகாரத்தைப் போன்று ராஜபக்ச ஆட்சியில் யாரேனும் கருத்து தெரிவித்திருந்தால் வழக்கு என்ற ஒன்றே தொடரப்பட்டிருக்காது என்றார்.

No comments:

Post a Comment