68 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் பஸ் உரிமையாளர் உட்பட இருவர் கைது - News View

About Us

About Us

Breaking

Monday, January 11, 2021

68 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் பஸ் உரிமையாளர் உட்பட இருவர் கைது

(செ.தேன்மொழி)

மொரட்டுவ மற்றும் களுத்துறை ஆகிய பகுதிகளில் 68 கிலோ கிராம் கேரளா கஞ்சா போதைப் பொருளுடன் பஸ் உரிமையாளர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, மொரட்டுவ மற்றும் களுத்துறை ஆகிய பகுதிகளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு கொழும்பு திட்டமிட்ட குற்றப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது கேரளா கஞ்சா போதைப் பொருளுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மொரட்டுவ - கொரலவெல்ல பகுதியில் வைத்து பாணந்துறை பகுதியைச் சேர்ந்த பஸ் உரிமையாளர் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளில் கேரளா கஞ்சாப் போதைப் பொருளை கடத்திச் சென்று கொண்டிருக்கும்போது கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரிடமிருந்து கேரளா கஞ்சா அடங்கிய 10 பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. 

இதனைத் தொடர்ந்து சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கமைய, பொருப்பண பகுதியில் அவரது சிநேகிதர் ஒருவரின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 15 கேரளா கஞ்சாப் பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதற்கமைய குறித்த பொதிகளிலிருந்து 51 கிலோ கிராம் கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

இதன்போது, சந்தேகநபரிடம் கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய இத்தேபான பகுதியைச் சேர்ந்த மரக்கறி வியாபாரியொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். லொறி ஒன்றில் கேரளா கஞ்சாத் தொகையை ஏற்றிச் சென்று கொண்டிருந்தபோதே சந்தேகநபர் களுத்துறை பகுதியில் வைத்து இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

இவர் பஸ் உரிமையாளரின் பரிந்துரைக்கமைய இத்தேபான உட்பட அதன் அண்மித்த பகுதிகளில் இந்த கேரளா கஞ்சா தொகையை விநியோகித்து வருவதாகவும் விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது. 

இதன்போது, லொறியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 17 பொதிகளுக்குள் இருந்து 17 கிலோ கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

யாழிலிருந்து கொழும்பு பொருளாதார மத்திய நிலையங்களுக்கு பொருட்களை ஏற்றிச் செல்லும் லொறிகளில் மறைத்து வைத்தே, கேரளா கஞ்சா தொகையை இவ்வாறு கடத்தப்பட்டு, பஸ் உரிமையாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளதுடன், அவர் ஏனைய பகுதிகளுக்கு அவற்றை விநியோகித்து வருவதாகவும் விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது. 

இந்நிலையில், சந்தேகநபர்களை தடுப்புக் காவலில் வைத்து தொடர்ந்தும் விசாரணை செய்வதற்கு பொலிஸார் எதிர்ப்பார்த்துள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment