ரோஹித் ஷர்மா உட்பட 5 இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஆஸ்திரேலியாவில் தனிமைப்படுத்தப்பட்டனர் - News View

About Us

About Us

Breaking

Saturday, January 2, 2021

ரோஹித் ஷர்மா உட்பட 5 இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஆஸ்திரேலியாவில் தனிமைப்படுத்தப்பட்டனர்

இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரோஹித் ஷர்மா உட்பட, இந்திய அணியின் 5 வீரர்கள் ஆஸ்திரேலியாவில் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.

ரிஷப் பந்த், சுப்மன் கில், ரோஹித் ஷர்மா, பிரித்வி ஷா, நவ்தீப் சைனி ஆகிய ஐந்து வீரர்களும் ஒரு மெல்பர்ன் உணவகத்தின் உள்ளே சாப்பிடும் காணொளி சமூக ஊடகத்தில் வெளியானதை அடுத்து அவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஜனவரி 6ம் திகதி முதல் ஆஸ்திரேலிய அணியுடன் 3வது டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வேண்டிய நிலையில் இந்த சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் 27ம் திகதி தொடங்கிய இந்திய அணியின் ஆஸ்திரேலிய சுற்றுப் பயணம், ஜனவரி 19ம் திகதி நிறைவடையும்.

இரண்டாவது டெஸ்ட் போட்டி நடந்த மெல்பர்ன் நகரில் அணி வீரர்கள் தங்கள் ஹோட்டல் அறையில் இருந்து வெளியே செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், அவர்கள் ஏதேனும் உணவகத்துக்கு செல்ல நேர்ந்தால் அதன் உள்ளரங்கில் அமரக்கூடாது. வெளியேதான் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டது.

ஆனால், ஒரு இந்திய அணி ஆதரவு ரசிகர் சமூக ஊடகத்தில் வெளியிட்ட காணொளியில் அவர்கள் அந்த உணவகத்தின் உள்ளே சாப்பிடுவது தெரிகிறது.

இந்த செயல் பயோ செக்யூரிட்டி நடைமுறை விதிகளை மீறும் வகையில் இருந்ததா என்பது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும், ஆஸ்திரேலிய கிரிக்கெட் கட்டுப்பாட்டு அமைப்பான கிரிக்கெட் ஆஸ்திரேலியாவும் ஆய்வு செய்து வருகின்றன.

இதற்கிடையே, ஆஸ்திரேலிய, இந்திய அணிகளின் மருத்துவர்கள் அளித்த அறிவுரைகளின் பேரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த ஐந்து வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். பயணத்தின்போதும், பயிற்சியின்போதும் இவர்கள் தனியாக இருப்பார்கள்.

திங்கட்கிழமை இந்த அணி மெல்பர்னில் இருந்து மூன்றாவது டெஸ்ட் நடக்கவுள்ள சிட்னி நகருக்கு பயணம் செய்ய வேண்டும்.

இந்த 5 வீரர்களில் பந்த்தும், கில்லும் 2வது டெஸ்டில் விளையாடினர். காயத்துக்குப் பிறகு, 14 நாள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ரோஹித் ஷர்மா 3வது டெஸ்டில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இப்போது இந்த சம்பவத்துக்குப் பிறகு இவர்கள் மூன்றாவது டெஸ்டில் விளையாட முடியுமா என்பது இன்னும் தெரியவில்லை.

டெஸ்ட் தொடரில் இந்திய - ஆஸ்திரேலிய அணிகள் தலா ஒரு போட்டியில் வென்று சமநிலையில் உள்ளன.

No comments:

Post a Comment