வாசு, தயாசிறி, ஹக்கீமுடன் நேரடி தொடர்பை பேணிய 24 எம்பிக்கள் தனிமைப்படுத்தலில் - பாராளுமன்றத்தில் சகல அதிகாரிகளுக்கும் என்டிஜன் பரிசோதனை முன்னெடுக்க தீர்மானம் - News View

Breaking

Post Top Ad

Monday, January 11, 2021

வாசு, தயாசிறி, ஹக்கீமுடன் நேரடி தொடர்பை பேணிய 24 எம்பிக்கள் தனிமைப்படுத்தலில் - பாராளுமன்றத்தில் சகல அதிகாரிகளுக்கும் என்டிஜன் பரிசோதனை முன்னெடுக்க தீர்மானம்

(ஆர்.யசி)

இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜெயசேகர மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹகீம் ஆகியோரை தொடர்ந்து அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவிற்கும் கொவிட்-19 வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து இவர்களின் முதலாம் தொடர்பாளர்களாக பாராளுமன்ற உறுப்பினர்கள் 24 பேரை தனிமைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

நாளையும், நாளை மறுதினமும் பாராளுமன்றம் முழுமையாக தொற்று நீக்கம் செய்யப்படவுள்ளதுடன், பாராளுமன்ற அதிகாரிகள், ஊழியர்கள் என சகலருக்கும் என்டிஜன் பரிசோதனையும் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜெயசேகர கொவிட்-19 வைரஸ் தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளமை கடந்த வெள்ளிக்கிழமை தெரிய வந்ததையடுத்து, பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமும் கொவிட்-19 வைரஸ் தொற்று நோய் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளார் என கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டது. 

இதனையடுத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் கொவிட்-19 வைரஸ் தொற்று நோய் தாக்கத்திற்கு உள்ளாகியிருக்க வாய்ப்புள்ளதாக சந்தேகிக்கப்பட்ட நிலையில் இன்றையதினம் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவிற்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

அமைச்சர் வாசுதேவ நாணயகாரவிற்கும் கொவிட்-19 வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவருடன் நேரடியான தொடர்புகளை பேணிய நபர்கள் குறித்தும் ஆராயப்பட்டு வருகின்றது. 

கடந்த ஐந்தாம் திகதியில் இருந்து தொடர்ச்சியாக நான்கு நாட்கள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொண்டுள்ளதுடன், ஆளும் கட்சி உறுப்பினர்கள் சிலருடனும், பாராளுமன்ற அதிகாரிகள், ஊழியர்கள் சிலருடன் அவர் கலந்துரையாடியுள்ளமையும் சி.சி.ரி.வி காணொளிகளில் கண்டறியப்பட்டுள்ளது. 

அவ்வாறு அமைச்சர் வாசுதேவவுடன் தொடர்பை பேணிய நபர்களை உடனடியாக தனிமைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமும் கொவிட்-19 வைரஸ் தொற்று நோய் தாக்கத்திற்கு உள்ளாகியதையடுத்து அவருடன் நேரடியாக தொடர்பை பேணிய 17 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

இவர்களில் பாராளுமன்ற உறுப்பினர்களான கயந்த கருணாதிலக, தலதா அத்துகோரள, எம்.எ.சுமந்திரன், ஆர். சாணக்கியன் ஆகியோர் தமது பி.சி.ஆர் பரிசோதனைகளை செய்துள்ளதுடன் அவர்களுக்கு கொவிட்-19 வைரஸ் தொற்றில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். ஏனையவர்களை சுய தனிமையில் இருக்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பிரதமர் இணைப்பு செயலாளர் குமாரசிறி ஹெட்டிகேவிற்கும் கொரோனா வைரஸ் தொற்று நோய் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கடந்த 8 ஆம் திகதி பாராளுமன்றத்திற்கு வருகை தந்துள்ள நிலையில் அவர் நேரடியாக நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களுடனும், சபாநாயகர் காரியாலய அதிகாரிகள், பாராளுமன்ற அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சிலருடன் நேரடியாக தொடர்பை பேணியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. 

எனவே இவ்வாறு தொடர்பை பேணிய பாராளுமன்ற ஊழியர்கள், அதிகாரிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் உடனடியாக சுய தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாளையதினமும் நாளையமறுதினமும் பாராளுமன்றத்தில் சகல அதிகாரிகளுக்கும் என்டிஜன் பரிசோதனைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 150 பேருக்கே பரிசோதனைகளை செய்ய முடியும் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே இரண்டு அல்லது மூன்று நாட்கள் இந்த பரிசோதனைகள் செய்யப்படும். 

அத்துடன் பாராளுமன்றத்திற்கு என தனியாக சுகாதார வழிமுறைகள் சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளது., அவற்றையும் முழுமையாக கடைப்பிடித்தே வருகின்றோம். எனினும் இவ்வாறான ஒரு சில செயற்பாடுகள் காரணமாக சிக்கல் நிலைமைகள் உருவாகின்றது. எவ்வாறு இருப்பினும் விரைவாக செயற்பட்டு பாராளுமன்ற கொத்தணி ஒன்று உருவாவதை தடுக்கவே நாம் முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றோம் என்றார் பாராளுமன்ற படைக்கல சேவிதர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad