(செ.தேன்மொழி)
புதுவருடப் பிறப்பு தினத்தன்று நாட்டின் பல பகுதிகளிலும் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். இதேவேளை, புதுவருடப் பிறப்பன்று மதுபோதையில் வாகனம் செலுத்தியதாக 253 சாரதிகளை கைது செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, புதுவருடப் பிறப்பன்று நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த பத்து நாட்களில் வாகன விபத்துகளின் காரணமாக நேற்று அதிகளவானவர்கள் உயிரிழந்துள்ளனர்.
கொவிட்-19 வைரஸ் பரவலுக்கு பின்னர் வாகன விபத்துக்களினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு 8-9 வரையிலேயே காணப்பட்டது. ஆனால், தற்போது அந்த அளவு அதிகரித்து வருகின்றமை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.
இதேவேளை புதுவருடப் பிறப்பன்று இடம்பெற்ற வாகன விபத்துக்களில் சிக்கி 40 பேர் காயமடைந்துள்ளதுடன், அவர்களுள் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி முதல் நேற்று காலை ஆறு மணி வரையில் வாகன விபத்துக்கள் காரணமாக 65 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
வாகன விபத்துக்களை தடுப்பதற்காக 9,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுப்படுத்தப்பட்டிருந்தாலும், வாகன சாரதிகளின் கவனக் குறைப்பாட்டின் காரணமாகவே இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
எனினும், எதிர்வரும் ஐந்தாம் திகதி வரை பொலிஸாரின் இந்த சோதனை நடவடிக்கைகள் தொடரும். அதற்கமைய, பொலிஸாரின் சோதனை நடவடிக்கைகளின்போது மதுபோதையில் வாகனம் செலுத்தியதாக நேற்று காலை ஆறு மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலயத்திற்குள் 253 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கடந்த 23 நாட்களுக்குள் மதுபோதையில் வாகனம் செலுத்தியதாக 1,824 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, வாகன விபத்துக்களினால் ஏற்படும் இழப்புகளை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றால் வாகன சாரதிகள் வீதி ஒழுங்கு விதிகளுக்கு புறம்பாக செயற்படுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு செயற்படுவதனால் நாட்டு மக்களே பாதிப்படைவார்கள் என்பதை கவனத்திற் கொள்ள வேண்டும்.
அதனால் மதுபோதையில், அதிகூடிய வேகத்திலும், கவமின்றியும், தொலைபேசியில் உரையாடிக்கொண்டும் வாகனங்களை ஓட்டுவதை சாரதிகள் முற்றாக தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment