1000 ரூபாய் சம்பளத்துக்கு உரிய தீர்வை உடனடியாக வழங்க வேண்டும் : கறுப்பு பட்டியணிந்து ஹற்றனில் போராட்டம் - News View

About Us

About Us

Breaking

Saturday, January 16, 2021

1000 ரூபாய் சம்பளத்துக்கு உரிய தீர்வை உடனடியாக வழங்க வேண்டும் : கறுப்பு பட்டியணிந்து ஹற்றனில் போராட்டம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபாய் நாட் சம்பளத்துக்கு உரிய தீர்வை உடனடியாக வழங்குமாறு வலியுறுத்தி, கறுப்பு பட்டியணிந்து ஹற்றனில் போராட்டமொன்று இன்று (ஞாயிற்றுக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.

பெருந்தோட்டத் தொழிலாளர் வேதன உரிமைக்கான இயக்கம் முன்னெடுத்து வரும் நாளாந்த அடிப்படை சம்பளம் மற்றும் மாதத்தில் 25 நாள் வேலை கோரிக்கைக்கான தொடர் போராட்டத்தில் மலையகத்தில் உள்ள பல்வேறு சிவில் அமைப்புகளும், இன்று ஹற்றன் - மல்லியப்பு சந்தியில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவு வழங்கியிருந்தது.

மேற்படி போராட்டத்தினை மலையக சிவில் அமைப்புகளின் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்ததுடன், போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கறுப்பு பட்டியை தலையில் அணிந்திருந்ததுடன் பதாதைகளை ஏந்தி கோஷமிட்டு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

தொழிலாளர்களின் இந்த நியாயமான கோரிக்கையை முதலாளிமார் சம்மேளனம் பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் இதை தொழிலாளர்கள் சார்பில் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்ததுடன், அரசாங்கம் உறுதியளித்தப்படி தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை நாட் சம்பளத்தினை 1000 ரூபாயாக பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் இதை இழுத்தடிப்பு செய்வதற்கு இடமளிக்கக்கூடாது என்றும் கோரிக்கை விடுத்தனர்.

இம்மாதம் முடிவதற்குள் தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை முடிவிற்கு கொண்டுவரப்பட வேண்டும் எனவும் மாறாக இழுத்தடிப்பு செய்யும் பட்சத்தில் கடந்த காலங்களை போல் ஏமாற்றம் செய்யாது குறிப்பிட்ட காலத்திற்கான நிலுவை பணத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் இந்த நியாயமான கோரிக்கை நிறைவேறாத பட்சத்தில் தொடர் போராட்டத்தை முன்னெடுக்கவிருப்பதாகவும் மலையகத்தில் உள்ள ஏனைய பல்வேறு இடங்களிலும் இப்போராட்டத்தினை விஸ்தரிக்கவுள்ளதாகவும் மலையக சிவில் அமைப்புகளின் கூட்டமைப்பின் தலைவர் எஸ்.டி.கணேசலிங்கம் தெரிவித்தார்.

No comments:

Post a Comment