ரணிலை சிறைக்கு அனுப்ப வேண்டும், அன்றுதான் எனக்கு நித்திரை வரும் என்கிறார் அமைச்சர் மஹிந்தானந்த - News View

About Us

About Us

Breaking

Wednesday, December 9, 2020

ரணிலை சிறைக்கு அனுப்ப வேண்டும், அன்றுதான் எனக்கு நித்திரை வரும் என்கிறார் அமைச்சர் மஹிந்தானந்த

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) 

நல்லாட்சியில் இடம்பெற்ற குற்றங்களுக்காக வழக்கு தொடுக்க வேண்டிய நபர்களுக்கு எதிராக வழக்கு தொடுப்போம், ஆனால் அரசியல் பழிவாங்கலை ஒருபோதும் மேற்கொள்ள மாட்டோம், ஆனாலும் இந்த குற்றங்களில் ரணில் விக்ரமசிங்கவையே சிறைக்கு அனுப்ப வேண்டும். அன்றே எனக்கு நித்திரை வரும் என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் நீதி, தொழில் அமைச்சுகள் மற்றும் இராஜாங்க அமைச்சுகள் மீதான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், நல்லாட்சியில் இடம்பெற்ற குற்றங்களுக்கு ரணில் - மைத்திரி மீது மாத்திரம் குற்றம் சுமத்தாது எதிர்க்கட்சியில் இன்று அமர்ந்துள்ள அனைவரும் பொறுப்புக்கூற வேண்டும். நல்லாட்சியில் நீதமன்ற சுயாதீனம் முழுமையாக நாசமாக்கப்பட்டது, ஆனால் எமது அரசாங்கம் நீதிமன்ற சுயாதீனத்தை அழித்துள்ளதாக கருத்தொன்றை உருவாக்க நினைக்கின்றனர்.

எமது ஆட்சியில் நீதிமன்ற சுயாதீன பலவீனம் குறித்து பேசிக் கொண்டு நல்லாட்சியில் ராஜபக்ஷவினரை சிறையில் அடைக்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டது நியாயமானதா? நீதிபதிகளை அலரி மாளிகைக்கு வரவழைத்து தீர்ப்புகளை தீர்மானிக்கும் நிலைமை காணப்பட்டது, எமக்கு எதிராக வழக்குகள் தொடுக்கப்பட்டது, ஆனால் நாம் ஒருபோதும் அரசியல் பழிவாங்கலை மேற்கொள்ள மாட்டோம். பொய் குற்றங்களை சாட்டி எவரையும் சிறையில் அடைக்க மாட்டோம். 

ஆனால் கடந்த காலத்தில் நடந்த குற்றங்களுக்காக வழக்கு தொடுக்க வேண்டிய நபர்களுக்கு எதிராக வழக்கு தொடுப்போம், ரஞ்சன் ராமநாயகவிற்கு எதிராக இரண்டு வழக்குகளை தொடுப்பேன், அதில் நிச்சயமாக ரஞ்சன் ராமநாயக குற்றவாளியாவர். ஆனால் இறுதி நேரத்தில் வழக்கை வாபஸ் பெறுவேன். ஏனென்றால் உண்மையில் சிறைக்கு அனுப்ப வேண்டியது ரஞ்சனையோ வேறு எவருமையோ அல்ல, ரணில் விக்ரமசிங்கவையே சிறைக்கு அனுப்ப வேண்டும். அன்றே எனக்கு நித்திரை வரும்.

விசேட நீதிமன்றங்களை அமைத்து எம்மை சிறைக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்தவர்கள் இன்று நீதிமன்ற சுயாதீனம் குறித்து பேசுவது வெட்கப்பட வேண்டிய விடயமாகும். ஆனால் நீதிமன்றம் சுயாதீனமாக இயங்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடைமில்லை. நாம் அதனை கண்டிப்பாக நடைமுறைப்படுத்துவோம். அதற்காகவே திறமையான ஒருவரை ஜனாதிபதி நீதி அமைச்சராக நியமித்துள்ளார். 

அதேபோல் ஒவ்வொரு அமைச்சிற்கும் தகுதியான அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எமது ஆட்சியில் நீதிமன்ற தீர்ப்புகளில் அரசியல் தலையீடுகள் இருக்காது, ஷானி அபேசேகர போன்றவர்கள், ரஞ்சன் ராமநாயக்க ஆகியோர் நீதிமன்றத்திற்கு எதிராக முன்னெடுத்த சதிகள் எதனையும் நாம் மறக்கவில்லை. ஆனால் எக்காரணம் கொண்டும் யாருக்கும் எதிராக அரசியல் பழிவாங்கல் எம்மால் முன்னெடுக்கப்படாது என்றார்.

No comments:

Post a Comment