வெளிநாட்டு சக்திகளின் பின்னணியிலேயே நாட்டின் ஜனாதிபதி, அரசாங்கம் உருவாகியுள்ளது - தயாசிறி ஜயசேகர விசாரணை ஆணைக்குழுவில் சாட்சியம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, December 9, 2020

வெளிநாட்டு சக்திகளின் பின்னணியிலேயே நாட்டின் ஜனாதிபதி, அரசாங்கம் உருவாகியுள்ளது - தயாசிறி ஜயசேகர விசாரணை ஆணைக்குழுவில் சாட்சியம்

(எம்.எப்.எம்.பஸீர்)

வெளிநாட்டு சக்திகளின் பின்னணியிலேயே, கடந்த 2015 முதல் நாட்டில் ஜனாதிபதிகள், அரசாங்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

ஏப்ரல் 21 தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் நேற்று செவ்வாய்க்கிழமை முதன் முறையாக சாட்சியமளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

முன்னாள் ஜனாதிபதியை வீட்டுக்கு அனுப்பிவிட்டு வேறு ஒரு ஜனாதிபதியை நியமிக்க வேண்டிய தேவை யாருக்கு இருந்தது எனவும் இதனையும் இவ்வாணைக்குழு தேடிப்பார்க்க வேண்டும் எனவும் அவர் தொடர்ந்தும் சாட்சியமளிக்கையில் தெரிவித்தார்.

21/4 உயிர்த்த ஞாயிறு தினம் இடம்பெற்ற தொடர் தற்கொலை தாக்குதல்களை மையப்படுத்தி அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க 1948 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க விசாரணை ஆணைக்குழுக்கள் சட்டத்தின் (393 ஆம் அதிகாரம்) 2 ஆம் அத்தியாயத்தின் கீழ் கடந்த 2019 செப்டம்பர் 21 ஆம் திகதி நியமிக்கப்பட்ட ஐவர் கொண்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவின் சாட்சி விசாரணைகள் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் அமைந்துள்ள ஆணைக்குழுவில் இடம்பெற்று வருகின்றது.

ஆணைக்குழுவின் தலைவர் மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி ஜனக் டி சில்வாவின் தலமையிலான மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி நிசங்க பந்துல கருணாரத்ன, ஓய்வுபெற்ற நீதிபதிகளான நிஹால் சுனில் ராஜபக்ஷ, அத்தபத்து லியனகே பந்துல குமார அத்தபத்து, ஓய்வுபெற்ற அமைச்சு செயலர் டப்ளியூ.எம்.எம். அதிகாரி ஆகியோர் முன்னிலையில் இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில், சாட்சிகளின் இடையே, கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலுக்குள் நுழைந்த குண்டுதாரி அங்கு தாக்குதல் நடாத்தாமை, அந்த ஹோட்டலில் விஷேடமான சிலர் தங்கியிருந்ததன் எதிரொலி என தயாசிரி ஜயசேகர, தாக்குதலின் பின்னர் வெளிப்படுத்திய கருத்து தொடர்பில் ஆணைக்குழு உறுப்பினர் மேன் முறையீட்டு நீதிமன்ற நீதிபதி நிசங்க பந்துல கருணாரத்ன கேள்வி எழுப்பினார். 

அதற்கு பதிலளித்தவாறு, இராஜாங்க அமைச்சர் தயாசிரி ஜயசேகர குறிப்பிடுகையில், அங்கு சிலர் தங்கியிருந்தனர் என்பதைவிட, ஏன் அந்த ஹோட்டலில் தாக்குதல் நடாத்தப்படவில்லை என்பதையே நான் சிந்தித்தேன். 

குண்டுதாரி ஹோட்டலுக்குள் சென்று மீண்டும் திரும்பி வந்தார். இந்த ஹோட்டலுடன் ஒரு நாடும், அந்நாட்டின் வர்த்தகரும் தொடர்புபட்டுள்ளமையை நீங்களும் அறிவீர்கள். அதனால் இது தொடர்பில் தேடிப்பார்க்குமாறு பொலிசாருக்கு கூறினோம்.

திடீர் என நாமல் குமார என ஒருவர் முளைக்கின்றார். அவர் ஆட்சியில் உள்ள ஜனாதிபதியையும், ஜனாதிபதியாகலாம் என எதிர்ப்பார்க்கப்பட்ட நபரையும் கொலை செய்ய திட்டமொன்று உள்ளதாக கூறும் அளவுக்கு நாடு அராஜக நிலைக்கு சென்றது எப்படி என்பதை தேடிப்பார்க்க வேண்டும்.

சஹ்ரானின் பின்னணியில் இருந்துகொன்டு அவரை நெறிப்படுத்தியவர் யார், ஏதேனும் நோக்கத்துக்காக சஹ்ரான் யாரோ ஒரு தரப்பினரால் பயன்படுத்தப்பட்டுள்ளாரா என்பதை தேடிப்பார்க்க வேண்டும். 

நாட்டில் தேசிய உளவுப் பிரிவுகளை விட, இந்நாட்டில் தாக்குதல் இடம்பெறப் போவது, அதற்கான இடம், அது தொடர்பிலான நேரம் வெளிநாட்டு உளவுத் துறையொன்றால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனூடாக இந்திய உளவுத்துறை இந்நாட்டில் எந்தளவு தூரம் செயற்பட்டுள்ளது என்பதை அறிய முடிகின்றது. எமக்கு தெரிந்தது இந்திய உளவுத்துறை மட்டும். 

இவ்வாறே எமக்கு தெரியாமால் எமது நாட்டில் எத்தனை வெளிநாட்டு உளவுச் சேவைகள் செயற்படுகின்றன. இவை கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயங்கள். இவ்வாறான நிலைமை எதிர்காலத்திலும் தொடருமானால், குண்டு வெடிப்புக்கள் மூலம் எத்தனை அரசாங்கங்கள் கவிழ்க்கப்படும் என்பது தெரியாது. 

சஹ்ரான் மட்டுமல்ல, சில குறைபாடுகள் இருப்பினும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி, முன்னாள் பிரதமர் ரணில், முன்னாள் பாதுகாப்பு செயலர் ஹேமசிறி, முன்னள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஆகியோர் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஒருவகையில் பாதிக்கப்பட்டவர்களாகவே நான் பார்க்கின்றேன். 

அரசியல் வாதியாகவும், சட்டத்தரணியாகவும் நான் அனைத்து விடயங்களையும் ஆராய்ந்த நிலையிலேயே இந்த விடயம் தொடர்பில் இங்கு குறிப்பிடுகிறேன்.

இந்த தாக்குதல் குறித்த விசாரணைகள் முறையாக இடம்பெறவில்லை என ரஞ்சித் கர்தினால் மெல்கம் ஆண்டகை கூறுவது கூட அத்தகைய நிலைமைகள் அவதானத்துக்கு உட்படாமையை சுட்டிக்காட்டுவதாக இருக்க முடியும். என தெரிவித்தார்.

இதனைவிட 2015 ஆம் ஆண்டின் பின்னர் தானும் அமைச்சரவையில் அமைச்சராக இருந்ததாக சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர் தயாசிரி ஜயசேகர, தேசிய பாதுகாப்பு விடயத்தில் சில குறைபாடுகள் இருந்ததாக ஒப்புக்கொண்டார்.

ஜெனீவா ஒப்பந்ததில் கைச்சாத்திட்டமைக்கு எதிராக அரசாங்கத்தில் இருந்துகொண்டே நாம் எதிர்த்தோம். ஜனாதிபதிக்கு அப்போது தேசிய பாதுகாப்பை பலப்படுத்த தேவை இருந்தது. எனினும் அரசாங்கத்தின் மறு தரப்பினருக்கு அந்த அவசியம் இருக்கவில்லை.' என ஆணைக்குழுவின் தலைவர் ஜனக் டி சில்வாவின் கேள்விக்கு பதிலளித்து இராஜாங்க அமைச்சர் தயாசிரி ஜயசேகர குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment