உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகமாக எச். எம். டபிள்யு. சி. பண்டார கடந்த 07 ஆம் திகதி தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
கடமைகளை பொறுப்பேற்ற பின்னர் அங்கு அவர் உரையாற்றும் போது, ஆணையாளர் நாயகமாக பதவி வகிக்கும் காலத்தில் உள்நாட்டு இறைவரி திணைக்களத்திற்கு வழங்கப்பட்ட வருமான இலக்குகளை நிறைவேற்றுவதன் ஊடாக தேசிய பொருளாதாரத்திற்கு பங்களிப்பு செய்வதற்கு மிகுந்த அர்ப்பணிப்புடன் கடமையாற்றுவேன் எனத் தெரிவித்தார்.
முக்கியமாக தற்போதைய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு அமைவாக திணைக்களத்தில் மேற்கொள்ளப்பட்ட மீள் - கட்டமைப்பு நடவடிக்கைகளை நேரடியாக மேற்பார்வை செய்வதற்கு எதிர்பார்ப்பதாகவும், குறிப்பாக, வரிகளை சேகரிக்கும் சந்தர்ப்பத்தில் கொவிட் நோய்ப் பரவல் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாண்மைகளுக்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்ட நிவாரணங்களுக்கு அமைவாக, அவசியமான நிவாரணங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்டார்.
அதேவேளை, மனித வள மேம்பாடு மற்றும் புதிய தொழில்நுட்ப அறிமுகம் என்பவற்றின் ஊடாக திணைக்களத்தை வினைத்திறன், செயற்திறன் மிக்கதாக்கி தரமான சேவையை வழங்கும் நிறுவனமாக உருவாக்குவதற்கு தனது தலைமைத்துவத்தை வழங்குவேன் எனவும் தெரிவித்தார்.
புதிய நோக்குடன் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் தலைமைத்துவத்தை பொறுப்பேற்கும் எச்.எம்.டபிள். சி பண்டார, உள்நாட்டு இறைவரி சேவையில் 1987 ஆம் ஆண்டு வரி மதிப்பீட்டாளராக இணைந்து கொண்டார்.
அதன் பின்னர் சிரேஷ்ட வரி மதிப்பீட்டாளர், பிரதி ஆணையாளர், ஆணையாளர், சிரேஷ்ட ஆணையாளர் மற்றும் பிரதி ஆணையாளர் நாயகமாக நியமனம் பெற்று, அவரது அர்ப்பணிப்பான சேவையினூடாக திணைக்களத்தின் அதி உயர் பதவியான உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம் எனும் பதவியைப் பெற்றுக் கொண்டமை அவரது பதவிக் காலத்தில் அவர் பெற்றுக் கொண்ட மிக முக்கியமான ஓர் வெற்றியாகும்.
திணைக்களத்தில் 33 வருட கால சேவைக் காலத்தின் போது, உள்ளூர் மற்றும் வெளிநாட்டின் பயிற்சி நெறிகள், மாநாடுகள், செயலரங்குகள் என்பவற்றில் பங்கேற்றுள்ளதுடன், இதன் மூலமாக அவர் வரியாக்கக் கொள்கை மற்றும் பிரயோக அறிவினைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
No comments:
Post a Comment