COVID-19 ஒழிப்பிற்கான தடுப்பூசி தொடர்பில் உலக நாடுகளின் கவனம் திரும்பியுள்ள நிலையில், கேகாலையைச் சேர்ந்த தம்மிக்க பண்டார தயாரித்த பாணி மருந்து இலங்கையில் அநேகமானவர்களது கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த மருந்து தொடர்பில் ஆராய்ந்த ஆயுர்வேத திணைக்களம் தம்மிக்க பண்டாரவிற்கு ஆயுர்வேத மருந்து உற்பத்தி நிலையமொன்றை பதிவு செய்வதற்கான எழுத்துமூல அனுமதியை வழங்கியுள்ளது.
உற்பத்தி நடவடிக்கைகளுக்காகவே அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதற்கமைய தனக்கு ஆலோசனை வழங்கும் மருத்துவரின் கீழ் மருந்தை உற்பத்தி செய்ய அவரால் முடியும் எனவும் ஆயுர்வேத ஆணையாளர் சதுர குமாரதுங்க தெரிவித்தார்.
எனினும், அவரது பாணி கொரோனா எதிர்ப்பு மருந்தாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை எனவும் சுகாதார அமைச்சு நியமித்த குழு அது தொடர்பிலான ஆய்வுக்கூட பரிசோதனைகளை நடத்தி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மருத்துவ பானமாக மாத்திரமே தற்போது அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
எவ்வாறாயினும், ஆயுர்வேத மருத்துவ உற்பத்தி நிலையமொன்றை பதிவு செய்வதற்கு தமக்கு கிடைத்த எழுத்து மூல அனுமதியை கேகாலையை சேர்ந்த தம்மிக்க பண்டார (23) நிராகரித்தார்.
தமது மருந்து கொரோனாவிற்கு சரி வராது என்பதை அன்றே கூறியிருக்க முடியும். அதை விடுத்து, போத்தல்கள் கணக்கில் அவற்றை வாங்கிச் சென்றது ஏன் என தம்மிக பண்டார கேள்வி எழுப்பினார்.
மேலும், தச்சுவேலை செய்யும் தம்மிகவின் மருந்து என்பதால், அது பற்றி கவனத்தில் எடுக்காமல் உள்ளனர் எனவும் விசனம் தெரிவித்தார்.
No comments:
Post a Comment