பிரதமர் மஹிந்த அன்று நிதி ஒதுக்காவிடின் கொரோனா தொற்று நெருக்கடிக்கு மத்தியில் பாரிய ஒளடத பற்றக்குறைக்கு முகங்கொடுக்க நேரிட்டிருக்கும் - வைத்தியர் உத்பல இந்திரவங்ஷ - News View

About Us

About Us

Breaking

Friday, December 25, 2020

பிரதமர் மஹிந்த அன்று நிதி ஒதுக்காவிடின் கொரோனா தொற்று நெருக்கடிக்கு மத்தியில் பாரிய ஒளடத பற்றக்குறைக்கு முகங்கொடுக்க நேரிட்டிருக்கும் - வைத்தியர் உத்பல இந்திரவங்ஷ

இன்று அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்திற்கு விசேடமான நாளாகும். மூன்று விடயங்களை கவனத்திற் கொண்டு நாம் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளோம். முதலாவது விடயம், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அப்போதைய ஜனாதிபதியாக சேவையாற்றிய காலப்பகுதியில் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்திற்கு செய்த சேவையை பாராட்டி அதற்கு நன்றி தெரிவிப்பதற்கும், இரண்டாவது நாம் புதிதாக ஹோர்மோன் மாத்திரைகள் மற்றும் கப்சியூள் உற்பத்தி ஆலையை திறத்தல், மூன்றாவது விடயம் ஃப்ளுகோஷைலின் என அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் வைத்தியர் உத்பல இந்திரவங்ஷ தெரிவித்தார்.

இரத்மலானையில் அமைந்துள்ள அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தில் புதிய ஹோர்மோன் மாத்திரை உற்பத்தி ஆலையை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்த போதே அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் வைத்தியர் உத்பல இந்திரவங்ஷ இவ்வாறு குறிப்பிட்டார்.

புதிய நாட்டிற்கு புதிய ஒளடதம் எனும் எண்ணக்கருவிற்கமைய அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தினால் புதிதாக உற்பத்தி ஆரம்பிக்கப்பட்ட ஃப்ளுகோஷைலின் ஒளடத மாத்திரையை பிரதமரிடம் வழங்கி, அறிமுகப்படுத்தும் நிகழ்வும் இடம்பெற்றது.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், நான் வரலாறு குறித்து ஞாபகப்படுத்தினால் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் 1987ஆம் ஆண்டு ஜப்பானின் நன்கொடையில் ஆரம்பிக்கப்பட்டதாகும். 550 மில்லியன் மாத்திரைகள் என்ற திறனுடன் இந்த உற்பத்தி ஆலை ஆரம்பிக்கப்பட்டது.

2012ஆம் ஆண்டு நிதி அமைச்சராக அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2.4 பில்லியன் ரூபாய்களை இந்த உற்பத்தி ஆலைக்காக வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்கிறார். நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய நவீன கருவிகள் இந்நிறுவனத்திற்கு கிடைக்கின்றன. 2012ஆம் ஆண்டு முதல் 2020 வரை இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு, மாத்திரைகளின் திறன் 3300 மில்லியன் வரை அதிகரித்துள்ளது. 

நிதியமைச்சர் என்ற ரீதியில் இத்திட்டத்திற்கு அன்று நிதி ஒதுக்கப்பட்டிருக்காவிடின் இந்த கொரோனா தொற்று நெருக்கடிக்கு மத்தியில் வைத்தியசாலை அமைப்புகள் பாரிய ஒளடத பற்றக்குறைக்கு முகங்கொடுக்க நேரிட்டிருக்கும். 

இந்தியா, சீனா ஆகிய நாடுகள் விமான நிலையங்கள், துறைமுகங்களை மூடிய போதிலும், நாம் ஒளடத உற்பத்தியை மேற்கொண்டமையால் அரச வைத்தியசாலைகளுக்கு தட்டுப்பாடின்றி ஒளடதங்களை பெற்றுக் கொள்ளக் கூடியதாயிற்று.

இத்தொழிற்சாலையின் உச்ச திறன் 3300 மில்லியனாகும். நாம் அந்த இலக்கை 2023ஆம் ஆண்டே அடைவதற்கு எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பிரதமரின் ஒதுக்கீடு காரணமாக எமக்கு 2021ஆம் ஆண்டிலேயே அந்த இலக்கை எட்ட முடிந்துள்ளது எனக் குறிப்பிட்டார்.

குறித்த சந்தர்ப்பத்தில், அமைச்சர்களான பவித்ரா வன்னிஆராச்சி, காமினி லொகுகே, சரத் வீரசேகர, கௌரவ இராஜாங்க அமைச்சர்களான சுதர்ஷனி பெர்னான்டோபுள்ளே, சன்ன ஜயசுமன, சீதா அரம்பேபொல, சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் எஸ்.எச்.முணசிங்க, அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் வைத்தியர் உத்பல இந்திரவங்ஷ, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் அநுருத்த பாதெனிய உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment