(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)
மஹர சிறைச்சாலையில் பாதாள கோஷ்டிகளுக்கிடையிலேயே கலவரம் இடம்பெற்றுள்ளது. அதனை கட்டுப்படுத்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளபோதும் அதனால் கைதிகள் யாரும் மரணித்ததாக இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என சிறைச்சாலை மறுசீரமைப்பு ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தில் நீதி மற்றும் தொழில் அமைச்சுகள் மற்றும் இராஜாங்க அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டில் மொத்தமாக 29 சிறைச்சாலைகள் இருக்கின்றன. கைதிகள் 25 ஆயிரத்தி 218 பேர் இருக்கின்றனர். ஆனால் 11 ஆயிரத்தி 762 பேர் வரையே தடுத்துவைக்க முடியுமாக இருக்கின்றது. அதனால் கைதிகளில் மன்னிப்பு வழங்க முடியுமான மற்றும் பிணை வழங்க முடியுமான கைதிகளுக்கு டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.
அதேபோன்று மரண தண்டனை கைதிகளுக்கு ஆயுள் தண்டனை ஆகவும் ஆயுள்கால தண்டனை கைதிகளின் தண்டனை காலத்ததை 20 வருடமாக மாற்றவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.
அத்துடன் தண்டப்பணம் வழங்க முடியாமல் இருக்கும் கைதிகளுக்கு நீதி அமைச்சினால் அந்த பணத்தை வழங்கி அவர்களை விடுவிக்க முடியுமான நடவடிக்கையை நீதி அமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகின்றார்.
மேலும் சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் ஆராய குழு அமைத்திருக்கின்றோம். அதன் இடைக்கால அறிக்கை தற்போது சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது. அதன் பிரகாரம் மஹர சிறைச்சாலையில் பாதாள கோஷ்டிகளுக்கிடையில் இடம்பெற்ற வாக்குவாதம் கலவராமாக மாறி இருக்கின்றது.
அதனை கட்டுப்படுத்தவே சிறைச்சாலை பாதுகாப்பு பிரிவினரால் துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டிருக்கின்றது. துப்பாக்கி சூடு கைதிகளை தாக்கி இருக்கின்றது. ஆனால் துப்பாக்கி பிரயோகத்தினால் கைதிகள் யாரும் இறந்ததாக இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
அதனால் கலவரம் தொடர்பான பூரண விசாரணை அறிக்கை கிடைத்ததும் அதனை சபைக்கு வெளிப்படுத்துவோம். எதனையும் மறைக்க வேண்டிய தேவை எமக்கில்லை என்றார்.
No comments:
Post a Comment