கற்றல் நடவடிக்கை ஜனவரியில் வெற்றிகரமாக ஆரம்பிக்கப்படும் - சுகாதார அதிகாரி அனைத்து பாடசாலைகளிலும் ஈடுபடுத்தப்படுவார் : கல்வி அமைச்சர் ஜி.எல். பீறிஷ் - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 29, 2020

கற்றல் நடவடிக்கை ஜனவரியில் வெற்றிகரமாக ஆரம்பிக்கப்படும் - சுகாதார அதிகாரி அனைத்து பாடசாலைகளிலும் ஈடுபடுத்தப்படுவார் : கல்வி அமைச்சர் ஜி.எல். பீறிஷ்

(இராஜதுரை ஹஷான்)

முதலாம் தவணை கற்றல் நடவடிக்கை எதிர்வரும் ஜனவரி மாதம் 11 ஆம் திகதி வெற்றிகரமாக ஆரம்பிக்கப்படும். குறுகிய அரசியல் நோக்கங்களை கருத்திற் கொண்டு மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்கவில்லை. பாடசாலைகளில் சுகாதார பாதுகாப்பு சிறந்த முறையில் செயற்படுத்தப்படும் ஆகவே பெற்றோர் அச்சம் கொள்ள வேண்டாம். சவால்களை வெற்றி கொள்ள அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீறிஷ் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன காரியாலயத்தில் நேற்று (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், சுகாதார தரப்பினரது அனுமதியினை பெற்றே பாடசாலைகளை திறக்கும் தீர்மானம் எடுக்கப்பட்டது. குறுகிய அரசியல் நோக்கங்களை மாணவர்களின் எதிர்காலத்தின் ஊடாக அடையும் தேவை அரசாங்கத்துக்கு கிடையாது.

பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் போது சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களை முறையாக செயற்படுத்த உரிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. சுகாதார உபகரணங்களை பெற்றுக் கொள்வதற்கான நிதி அனைத்து கல்வி வலயங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

பாடசாலைகளின் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கையினை அன்றாடம் கண்காணிக்க ஒரு சுகாதார அதிகாரி அனைத்து பாடசாலைகளிலும் சேவையில் ஈடுப்படுத்தப்படுவார். அத்துடன் 3 கட்டமாக சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

அத்துடன் மேலதிகமாக பாடசாலைகளை கண்காணிக்கும் பொறுப்பு மாகாண ஆளுநர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. எதிர்வரும் 4 ஆம் திகதி தொடக்கம் 11 ஆம் திகதி வரை பெற்றோர் பாடசாலைக்களுடன் நேரடியாக தொடர்புகொண்டு சுகாதார வழிமுறைகள் குறித்து தெளிவு பெற்றுக் கொள்ளலாம்.

பாடசாலைக்கு மாணவர்கள் வருகை தரும் போக்கு வரத்து வழிமுறை குறித்து இவ்வாரம் போக்கு வரத்து அமைச்சுடன் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படவுள்ளது.

ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கு இடையில் சமூக இடைவெளியை பேணுவது கட்டாயமாகும். இதற்கமைய திங்கள், செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் ஆரம்ப பிரிவு மாணவர்களில் ஒரு பிரிவினரைவும், பிறிதொரு தரப்பினரை மிகுதி நாட்களில் பாடசாலைக்கு அழைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனை பாடசாலை நிர்வாகம் முறையாக செயற்படுத்த வேண்டும்.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் கல்வி துறைக்கு பாரிய சவால் ஏற்பட்டுள்ளது. சவாலை வெற்றி கொள்வதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

பாடசாலைகளில் சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் கடுமையான முறையில் பின்பற்றப்படும் ஆகவே பெற்றோர் அச்சம் கொள்ள வேண்டாம். என்றார்.

No comments:

Post a Comment