(எம்.மனோசித்ரா)
இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் அனைவரும் நேற்று செவ்வாய்கிழமை பதவி விலகியுள்ளனர். ஆணைக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான பேராசிரியர் கபில பெரேரா நேற்று மாலை இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
அதற்கமைய பேராசிரியர் கபில பெரேரா உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் நிதி அமைச்சின் செயலாளரிடம் தமது இராஜினாமா கடிதத்தை நேற்று மாலை கையளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேராசிரியர் கித்சிறி லியனகே இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவராகவும், சந்திரா ஏக்கநாயக்க உப தலைவராகவும், கலாநிதி நிஷான் டி மெல் மற்றும் சதுன் கமகே ஆகியோர் ஏனைய உறுப்பினர்களாகவும் செயற்பட்டிருந்தனர்.
இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிற்கு நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்களின் பதவிக்காலம் 05 வருடங்களாகும்.
இந்த ஆணைக்குழுவிற்கு நியமிக்கப்படும் உறுப்பினர்கள் தானாக பதவி விலகினாலன்றி, ஏதேனும் ஒரு முறைகேடு தொடர்பிலான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதன் பின்னர் பாராளுமன்றத்தில் பிரேரணை நிறைவேற்றுவதன் மூலமே அவர்களை பதவியிலிருந்து நீக்க முடியும்.
மின்சக்தி துறையின் ஒழுங்குபடுத்தல் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ள இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு இரத்து செய்யப்பட வேண்டும் என்று கடந்த முதலாம் திகதி ஜனாதிபதியின் செயலாளர் பி.பி.ஜயசுந்தர திறைசேரி செயலாளருக்கு கடிதம் அனுப்பியிருந்தார். இந்த கடிதம் பெரும் சர்ச்சைகளையும் விமர்சனங்களையும் உருவாக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment