அதிவேக நெடுஞ்சாலையில் கடவத்தை முதல் மீரிகம வரையிலான கட்டுமானப் பணிகள் மந்த கதியில் முன்னெடுக்கப்படுவதால் எதிர்பார்க்கப்படும் இலக்கை அடைய முடியாதிருப்பது தொடர்பில் அதிருப்தியை வெளிப்படுத்திய நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணாந்து, இது குறித்து உடனடியாக அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு நெடுஞ்சாலை அமைச்சின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதிவேக நெடுஞ்சாலையை அமைக்கும் பணிகள் உரிய வேகத்தில் முன்னெடுக்கப்படுவதில்லையென கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உபுல் மஹேந்திர ராஜபக்ஷ உள்ளிட்ட ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியபோதே அமைச்சர் அதிகாரிகளுக்கு இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் (07) நடைபெற்ற நெடுஞ்சாலை அமைச்சு தொடர்பான ஆலோசனைக்குழுக் கூட்டத்திலேயே இவ்விடயம் பற்றி கவனம் செலுத்தப்பட்டது.
இதற்கமைய அதிவேக நெடுஞ்சாலை அமைக்கும் பணிகளை உடனடியாகத் துரிதப்படுத்துமாறு பணிப்புரை விடுத்த அமைச்சர், கட்டுமானப் பணிகளைப் பார்வையிட தன்னுடன் வருமாறு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்ததுடன், இதற்கான திகதியொன்றை வழங்குவதாகவும் கூறினார்.
கட்டுமானப் பணிகள் மந்தகதியில் முன்னெடுக்கப்படுகின்றபோதும் இரண்டாவது கொடுப்பனவை வழங்குமாறு கோரிக்கைகள் விடுக்கப்பட்டிருப்பதாகவும் இக்கலந்துரையாடலில் வெளிப்பட்டது. உடனடியாக இந்தக் கொடுப்பனவை நிறுத்துமாறும் அமைச்சர் பணிப்புரை விடுத்தார்.
உரிய நேரத்தில் முன்னெடுக்கப்படாத அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதி வழங்க வேண்டாமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்திருப்பதாகவும் அமைச்சர் இங்கு சுட்டிக்காட்டினார்.
No comments:
Post a Comment