ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான தற்போதைய அரசாங்கத்தின் சுகாதாரத் துறை கொள்கைகளுக்கு அமைய, நமது நாட்டு நீரிழிவு நோயாளர்களுக்குத் தேவையான இன்சுலின் மருந்தை இன்னும் 24 மாத காலத்தினுள் உள்நாட்டிலேயே தயாரித்து வழங்க முடியுமென ஒளடத உற்பத்திகள் மற்றும் விநியோக ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் ஷன்ன ஜயசுமன தெரிவித்தார்.
‘வெளிநாடுகளிலிருந்து நமது நாட்டுக்குத் தேவையான மருந்து வகைகளை கொள்வனவு செய்யும் போது அதிகளவிலான பணத்தினை செலவு செய்ய வேண்டியுள்ளது. அதனை கட்டுப்படுத்தும் வகையிலேயே நமது நாட்டுக்குத் தேவையான மருந்து வகைகளை உள்நாட்டிலேயே தயாரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நமது நாட்டின் பணம் வெளிநாடுகளுக்கு செல்வது நிறுத்தப்படும் வாய்ப்பு ஏற்படுகின்றது.
தேசிய மருந்து தரப் பாதுகாப்பு ஆராய்ச்சி நிலையத்தினை அமைப்பதற்கு நாரஹேன்பிட்டியவிலுள்ள மூன்று ஏக்கர் காணி தற்சமயம் நகர அபிவிருத்தி அதிகார சபை ஊடாக எங்களுக்குக் கிடைத்துள்ளது. ஜனாதிபதியினதும் பிரதமரினதும் கண்காணிப்பின் கீழ் இவை இடம்பெறுகின்றன.
அதேபோன்று 500 ஏக்கர் காணியில் மருந்து தயாரிப்பு வலயமொன்றினை உருவாக்க எதிர்பார்க்கின்றோம். ஹம்பாந்தோட்டை மற்றும் மத்தளை விமான நிலையத்திற்கு அருகில் இத்தயாரிப்பு நிலையத்தை நிர்மாணிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இதனை நாம் செய்வது மருந்து வகைகளை ஏற்றுமதி செய்யும் இலக்கைக் கொண்டாகும்.
அதற்கான அமைச்சரவை அனுமதியும் தற்சமயம் கிடைத்துள்ளது. அது சம்பந்தமாக சுற்றுச்சூழல் மதிப்பீட்டு அறிக்கையொன்றையும் நாம் கோரியுள்ளோம். எதிர்வரும் சில வாரங்களில் அதற்கு பொருத்தமான முதலீட்டினை பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று இன்சுலின் தயாரிப்புக்கு தனியார் பிரிவினரின் பங்களிப்பையும் பெற்றுக் கொண்டு தொழிற்சாலையொன்றை கொக்கல சுதந்திர வர்த்தக வலயத்தில் தற்சமயம் ஆரம்பித்துள்ளோம். 24 மாதத்திற்குள் நமது நாட்டுக்குத் தேவையான இன்சுலினை நமது நாட்டிலேயே தயாரித்து வழங்குவதற்கு நாங்கள் தயார்’ என இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார் .
ஆதம்பாவா பிர்தெளஸ்
(அநுராதபுரம் நிருபர்)
No comments:
Post a Comment