முழுமையாக பழுதடைந்த காரணத்தினால் சேவையில் இருந்து ஒதுக்கப்பட்டிருந்த இலங்கை போக்கு வரத்து சபைக்கு சொந்தமான 273 பஸ் வண்டிகளை புதுப்பித்து மீண்டும் பயணிகள் போக்கு வரத்து சேவையில் இணைக்கும் நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று (31.12.2020) முற்பகல் காலி முகத்திடலில் இடம்பெற்றது.
இந்த பஸ் வண்டிகள் நாடு முழுவதும் கிராமப்புற வீதிகளில் பயணிகள் போக்கு வரத்துக்காக பயன்படுத்தப்படவுள்ளன.
இந்த திட்டம் போக்கு வரத்து ஒழுங்குபடுத்தல், பஸ் போக்கு வரத்து சேவைகள் மற்றும் புகையிரத பெட்டிகள், மோட்டார் வாகன கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவின் ஆலோசனையின் பேரில் போக்கு வரத்து அமைச்சர் காமினி லொகுகேயின் வழிகாட்டுதலின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டது.
வீழ்ச்சியடைந்திருந்த பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் வாகன இறக்குமதி தடை செய்யப்பட்டது. இதனால், பயணிகள் போக்கு வரத்துக்கான பேருந்துகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டது. இந்த பிரச்சினைக்கு தீர்வாக ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டத்தின் ஊடாக பஸ் இறக்குமதிக்காக செலவிடப்பட்ட அந்நிய செலாவணியை சேமிக்க முடியும்.
நாடு முழுவதும் உள்ள 107 டிப்போக்களில் முழுமையாக சேவையில் இருந்து ஒதுக்கப்பட்டிருந்த 273 பேருந்துகள் ரூபா. 115 மில்லியன் செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளன.
இந்த திட்டத்தை இலங்கை போக்கு வரத்து சபை டிப்போ மற்றும் லக்திவ பொறியியல் நிறுவனம் ஆகியன இலங்கை பொதுப் போக்கு வரத்து ஊழியர் சங்கத்தின் முழு ஆதரவோடு செயல்படுத்தி வருகின்றன. திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
பேருந்துகளின் தரத்தை கண்காணித்த ஜனாதிபதி, இலங்கை போக்கு வரத்து சபை ஊழியர்களுடன் சுமுகமாக கலந்துரையாடி அவர்களை ஊக்குவித்தார்.
போக்கு வரத்து அமைச்சர் காமினி லொகுகே, இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க மற்றும் இலங்கை போக்குவரத்து சபை தலைவர் கிங்ஸ்லி ரணவக ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment