23 ஆயிரம் புலிகளை கொலை செய்தோம் ! ஐயாயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் ! பொன்சேகா என்றால் யார்? தற்போதைய இராணுவ தளபதியிடம் கேளுங்கள் சொல்லுவார் - News View

About Us

About Us

Breaking

Saturday, December 5, 2020

23 ஆயிரம் புலிகளை கொலை செய்தோம் ! ஐயாயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் ! பொன்சேகா என்றால் யார்? தற்போதைய இராணுவ தளபதியிடம் கேளுங்கள் சொல்லுவார்

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) 

இறுதி யுத்தத்தில் 40 ஆயிரம் பொதுமக்கள் கொலை செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்படுகின்ற போதிலும் அது உண்மையல்ல. ஆனால் இறுதி யுத்தத்தில் பொதுமக்கள் இராணுவத்தால் கொல்லப்பட்டனர். அதிகபட்சம் ஐயாயிரம் பொதுமக்கள் யுத்தத்தில் கொல்லப்பட்டிருக்க முடியும் எனவும், 23 ஆயிரம் புலிகளை கொலை செய்ததாகவும் எஞ்சிய 12 ஆயிரம் புலிகளை புனர்வாழ்வுக்கு உற்படுத்தி விடுவித்தோம் எனவும் முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போதய எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினருமான பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். 

யுத்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் எழுகின்ற சர்வதேச அழுத்தங்களையும் கருத்தில் கொண்டு இந்த நெருக்கடிகளுக்கு இறுதியான தீர்மானம் ஒன்றினை எட்டக்கூடிய நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். 

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை, அரசாங்கத்தின் 2021 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டின் குழுநிலை விவாதத்தில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார். 

அவர் மேலும் கூறுகையில், வடக்கில் பொதுமக்களை இராணுவம் கொன்றதாக தொடர்ச்சியாக கூறி வருகின்றது கேட்க முடிகின்றது. ஆனால் வடக்கில் யுத்தத்தில் பொதுமக்களை நாம் கொலை செய்யவில்லை. ஆனால் விடுதலைப் புலிகள் ஒரு சில சந்தர்ப்பங்களில் பொதுமக்களை முன்னிறுத்தி தமது பாதுகாப்பை உறுதிப்படுத்தியிருந்தனர். பதுங்கு குழிகளில் அவ்வாறு பொதுமக்களை பணயம் வைத்திருந்தனர். அவர்களை பிடித்து புனர்வாழ்வு வழங்கினோமே தவிர எவரையும் கொலை செய்யவில்லை. 

40 ஆயிரம் பொதுமக்கள் கொலை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு உள்ளது. ஆனால் நான் நினைக்கிறேன் அதிகபட்சம் ஐயாயிரம் பொதுமக்கள் யுத்தத்தில் கொல்லப்பட்டிருக்க முடியும். ஏனென்றால் விடுதலைப் புலிகள் பொதுமக்களை அதிகமாக அவர்களின் போராட்டத்தில் முதன்மைப்படுத்தினர். வயோதிபர்களை கூட அவர்கள் ஆயுத பயிற்சிக்கு ஈடுபடுத்தி பதுங்கு குழிகளில் கடமைக்கு அமர்த்தினர். அவ்வாறான நிலையில் பொதுமக்களும் கொல்லப்படுவதை தடுக்க முடியாது. எனினும் பொதுமக்களை முடிந்தளவு பாதுகாத்தே போரை நடத்தினோம். 

23 ஆயிரம் புலிகளை கொலை செய்தோம் 
2 இலட்சத்து 90 ஆயிரம் பொதுமக்களை யுத்த பூமியில் இருந்து மீட்டோம். மொத்தமாக 35 ஆயிரம் விடுதலைப் புலிகளில் 23 ஆயிரம் புலிகளை கொலை செய்தோம். எஞ்சிய 12 ஆயிரம் புலிகளை புனர்வாழ்வுக்கு உற்படுத்தி விடுவித்தோம். இவர்களை மீண்டும் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடுத்துவது தடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும். இப்போது மீண்டும் பயங்கரவாத செயற்பாடுகள் ஆங்காங்கே தலைதூக்குகின்றது. 

அதேபோல் இன்று மாவீரர் தினம் குறித்து பேசுகின்றனர். நேற்று (புதன்கிழமை) வந்த புயல் ஒரு சில நாட்களுக்கு முன்னர் வந்திருந்தால் நல்லதென்றே நான் நினைக்கிறேன். ஏனென்றால் வந்த புயல் மாவீரர் தினம் நடத்திய இடத்தைத்தான் அதிகமாக தாக்கியுள்ளது. 

சபையில் மாவீரர் தினம் குறித்து பேசும் நபர்கள் இனவாதத்தை தூண்டிவிடவே பேசுகின்றனர். ஆனால் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க அனுமதிக்க முடியாது. இனி அதனை பற்றி பேசி அர்த்தமில்லை. எமது தரப்பில் இருந்த மனோ கணேசன் கூட மாவீர் தினத்தை பற்றி பேசினார். அது கட்சியின் கருத்து அல்ல. 

அதேபோல் ஜே.வி.பியுடன் விடுதலைப் புலிகளை ஒப்பிட்டு பேசுகின்றனர். ஜே.வி.பி புரட்சி அரசியல் புரட்சியாகும், ஆனால் விடுதலைப் புலிகளின் ஆயுத போராட்டம் நாட்டினை துண்டாடும் முயற்சியாகும். ஆகவே பயங்கரவதத்தை ஜே.வி.பியுடன் ஒப்பிட முடியாது. 

புலனாய்வை பலப்படுத்த வேண்டும் 
இராணுவத்தை புதுப்பிக்க வேண்டும், இரு கணணிகளை கொடுத்துவிட்டு நவீன இராணுவம் என கூற முடியாது. நவீன இராணுவ தளபாடங்கள், நவீன விமானங்கள், யுத்த கப்பல்கள் எமது இராணுவத்திற்கு அவசியமாகும். அதனையே அரசாங்கம் கருத்தில் கொள்ள வேண்டும். 

அதேபோல் புலனாய்வுத் துறையை பொறுத்த வரையில் அதில் ஒரு சில அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனரே தவிர புலனாய்வு துறையில் எந்தவித மாற்றங்களும் செய்யப்படவில்லை. தூரநோக்கு மற்றும் குறுகிய திட்டங்களை கருத்தில் கொண்டு புலனாய்வை பலப்படுத்த வேண்டும். ஆனால் அதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படவில்லை என்றே நான் கருதுகிறேன். 

சர்வதேச விரோதங்களை வளர்க்க வேண்டாம் 
யுத்த குற்றச்சாட்டு குறித்து பேசப்படுகின்றது, சர்வதேச விசாரணைக்கான பிரேரணை ஒன்றினை முன்வைக்க பிரித்தானிய பாராளுமன்றத்தில் ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது, எனவே இப்போதும் இலங்கைக்கு எதிரான அழுத்தங்கள் எழுகின்றன. 

வெறுமனே இராணுவ ரீதியில் மாத்திரம் அனைத்தையும் பார்க்க முடியாது. எமக்கு எதிரான பொருளாதார தடைகள், வரி விதிப்புகள் பற்றியெல்லாம் பேசப்படுகின்றது. எனவே இந்த காரணிகளையும் கருத்தில் கொண்டு பேச்சுவார்த்தைகளை நடத்தி ஒரு இணைக்கப்பாட்டை எட்ட வேண்டும். இந்த காரணிகளை குழப்பி தொடர்ச்சியாக இழுத்தடித்துக் கொண்டு இருக்காது இறுதியான தீர்மானம் ஒன்றினை எட்டக்கூடிய நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும். 

சகல துறைகளிலும் இராணுவத்தை நுழைப்பது அவசியமில்லை 
சிவில் செயற்பாடுகளில் இராணுவத்தை இணைத்துக் கொள்வதில் தவறில்லை. அவசியமான துறைகளில் பாதுகாப்பு படைகளை இணைப்பது ஆரோக்கியமானது. சுங்கம், சுகாதார துறைகளில் இராணுவத்தை கொண்டு இலகுவாக கையாள முடியும். 

ஆனால் சகல துறைகளிலும் இராணுவத்தை நுழைப்பது அவசியமில்லை என கருதுகிறேன். அது நாட்டில் மாற்று கருத்தொன்றை உருவாக்கும். எனவே அதனை தவிர்த்தால் ஜனநாயக ரீதியிலும் பதில் கூற முடியும். இவற்றையும் அரசாங்கம் கருத்தில் கொள்ள வேண்டும். 

சிறைக் கைதிகளுக்கும் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்
நாட்டின் பாதுகாப்பு என்ற விடயத்தில் சகல மக்களுக்குமே பாதுகாப்பு இருக்க வேண்டும். சிறைக்கைதிகளுக்கும் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். அதுவே நாட்டின் பாதுகாப்பை உறுதிபடுத்தும். 

மஹர சிறையில் இடம்பெற்ற சம்பவங்களை தடுத்திருக்க முடியும். சிறைச்சாலைக்கு செல்வபவர்களை மயானத்திற்கு அனுப்பக்கூடாது. சிறைக்குள் போதைப் பொருள் அவசியமில்லை. இவற்றையெல்லாம் தடுக்க வேண்டும். ஒழுக்கமுள்ள நாடாக இவற்றில் மாற்றங்களை உருவாக்க வேண்டும். 

மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்குகின்றது 
கிளைமோர் வெடி குண்டுடன் முன்னாள் புலி உறுப்பினர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். உடனடியாக புலனாய்வுத்துறை விசாரணைகளை நடத்த வேண்டும். வெறுமனே அவர்களை கைது செய்வது போதாது, அவர்களுக்கு கிளைமோர் எங்கிருந்து கிடைத்தது, யார் இவர்களை அனுப்பியது என்பதை தேடியாக வேண்டும். 

குண்டு வைக்க வந்தவனை பிடித்து சம்பவத்தை தடுப்பது மட்டுமே போதுமானதல்ல. மீண்டும் நாட்டில் பயங்கரவாதம் தலைதூக்க முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றது. ஆகவே இதனை ஆழமாக ஆராய வேண்டும். 

பொன்சேகா என்றால் யார்? 
இந்த சபையில் உள்ள ஒரு சிலர் இராணுவத்தையும், இராணுவ தளபதிகளையும் விமர்சிக்கின்றனர். மழைக்கு இராணுவ முகாம் பக்கம் ஒதுங்கியவர்கள் எமக்கு இராணுவம் பற்றி கற்பிக்க நினைக்கின்றனர். இவர்களுக்கு நான் கூறிக்கொள்வது ஒன்றுதான், சரத் பொன்சேகா என்றால் யார், சரத் பொன்சேகா இராணுவத்திற்கு என்ன செய்தார் என்பதை தற்போதுள்ள இராணுவ தளபதியிடம் கேளுங்கள். உண்மைகளை அவர் கூறுவார் என்றார்.

No comments:

Post a Comment