பெண்கள் ஆரோக்கிய துவாய் வரி சோடிக்கப்பட்ட பொய் என்கிறார் அமைச்சர் பந்துல குணவர்தன - News View

About Us

About Us

Breaking

Saturday, November 28, 2020

பெண்கள் ஆரோக்கிய துவாய் வரி சோடிக்கப்பட்ட பொய் என்கிறார் அமைச்சர் பந்துல குணவர்தன

பெண்களின் சுகாதாரப் பாதுகாப்புக்கான நாப்கின்களுக்கு நூற்றுக்கு 15 சதவீதம் செஸ் வரி விதிக்கப்பட்டுள்ளதாக சோடிக்கப்பட்ட பொய்யான கருத்துகள் பரப்பப்பட்டு வருகின்றன. மேலதிகமாக ஒருசதத்தைக்கூட நெப்கின்களுக்கு விதிக்கப்படவில்லை. 30 சதவீத இறக்குமதி வரியை 15 சதவீத இறக்குமதி வரியாக குறைத்து தேசிய உற்பத்தியை அதிகரிக்க 15 சதவீதம் செஸ் வரியாக மாற்றப்பட்டுள்ளதென வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

பாராளுமன்றில் நேற்று விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது, பெண்களின் சுகாதாரப் பாதுகாப்புக்கான நாப்கின்களுக்கு நூற்றுக்கு 15 சதவீதம் வரி விதித்து பெண்களை அரசாங்கம் சிரமத்திற்கு உள்ளாக்கியுள்ளதாக கடந்த சில நாட்களாக கருத்துகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இது முற்று முழுதாக சோடிக்கப்பட்ட பொய்யாகும். எதனையும் அறிந்துக்கொள்ளாது வெளியிடப்படும் கருத்துகளாகும்.

வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பெண்களின் சுகாதாரப் பாதுகாப்புக்கான நாப்கின்களுக்கு இதற்கு முன்னர் நூற்றுக்கு 30 சதவீதமான வரி அறவிடப்பட்டது. இதனைதான் நாம் மாற்றியுள்ளோம். 15 சதவீதத்தை இறக்குமதி வரியாகும் 15 சதவீதத்தை செஸ் வரியாகவும் மாற்றியுள்ளோம். ஒருசதம்கூட வரியில் மாற்றம் ஏற்படவில்லை. 

உலகளாவிய ரீதியில் தயாரிக்கப்படும் தரத்தைவிட தரம் வாய்ந்ததாகவும் மிகவும் குறைந்த விலையில் இலங்கையில் நெப்கின்களை தயாரிக்க முடியும் என்பதற்காகவே செஸ் வரி 15 வீதம் விதிக்கப்பட்டது.

இதனை உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் பிரதானிகளை நாம் அமைச்சுக்கு அழைத்து கலந்துரையாடல்களை நடத்தியுள்ளோம். கிராமிய பிரதேசங்களுக்கு குறைந்த விலையில் பெற்றுக்கொடுப்பதன் மூலம் கேள்விகள் அதிகரித்தால் முழுமையான கேள்விக்கு நெப்கின்களை தேசிய உற்பத்தியாளர்கள் மூலமே பெற்றுக்கொடுக்க முடியும்.

சம்ஷ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

No comments:

Post a Comment