ஏ.எச்.ஏ. ஹுஸைன்
நாட்டிலுள்ள சமூக மக்களிடையே அமைதியும் ஆனந்தமும் நிலவுவதற்கு பல்லினத்துவ கலாசார பாரம்பரிய அம்சங்களையும் பண்டிகைகளையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.
தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுவதையிட்டு அவர் விடுத்துள்ள செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது இனவாத மதவாத பிரிவினைவாத செயற்பாடுகளால் நீண்ட காலமாக அமைதியை இழந்த பல்லினங்கள் வாழும் எமது நாட்டில் தற்போது யுத்தம் ஓய்ந்து அமைதி நிலவுகிறது.
இத்தறுவாயில் பல்லினத்துவத்தின் அழகில் நாம் அமைதியை அனுபவிக்க வேண்டும்.
வேற்றுமைகளை வேறுபட்டு நிற்பதற்குப் பயன்படுத்திக் கொள்ளாமல் வேற்றுமைகளை கொண்டாட வேண்டும்.
ஒரு மலர்ப் பூங்காவனத்தில் பல்லின மலர்கள் பூத்துக் குலுங்கி மணம் வீசுவதைப் போன்று பல்லின சமுதாய மக்கள் வாழும் இலங்கைத் திருநாட்டிலும் நாம் பல்வேறு கலாசார பாரம்பரிய பண்பாட்டு விழுமியங்களை பூத்துக் குலுங்க வைக்க வேண்டும்.
இனிவரும் காலங்களில் இதயங்களில் அமைதி பொங்க அனைத்து மத கொண்டாட்டங்களும் கலாசார பாரம்பரிய பண்பாட்டு விழுமிய அம்சங்களையும் அங்கீகரிக்கும் பக்குவம் நமக்குள் ஆணித்தரமாக ஏற்பட வேண்டும்.
தீபாவளியைக் கொண்டாடும் அனைவருக்கும் நேர்வழியும் சீரிய வாழ்வும் சிறந்த வளமும் நீடித்த அமைதியும் கிடைக்க எனது வாழ்த்துக்கள்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment