வவுனியாவில் ஓரினச் சேர்க்கையால் அதிகரிக்கும் எயிட்ஸ் - இலங்கையில் அனைவரும் ஒரு தடவை எச்.ஐ.வி பரிசோதனை செய்ய வேண்டும் என்கிறார் வைத்தியர் சந்திரகுமார் - News View

About Us

About Us

Breaking

Monday, November 30, 2020

வவுனியாவில் ஓரினச் சேர்க்கையால் அதிகரிக்கும் எயிட்ஸ் - இலங்கையில் அனைவரும் ஒரு தடவை எச்.ஐ.வி பரிசோதனை செய்ய வேண்டும் என்கிறார் வைத்தியர் சந்திரகுமார்

வவுனியாவில் ஓரினச் சேர்க்கையால் அதிகரிக்கும் எயிட்ஸ் இளைஞர்களை அவதானமாக இருக்குமாறு வவுனியா மாவட்ட பாலியல் நோய் தடுப்பு சிகிச்சை பிரிவு பொறுப்பதிகாரி வைத்தியர் கே. சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

இன்று வவுனியா வைத்தியாசாலையில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், உலக எய்ட்ஸ் தினம் ஒவ்வொரு டிசம்பர் மாதம் முதலாம் திகதியும் நினைவு கூறப்படுகிறது. அந்த வகையில் வவுனியா மாவட்டத்திலும் உலக எய்ட்ஸ் தினத்தை நினைவு கூறவிருக்கிறோம். இலங்கையைப் பொறுத்த வரையில் இன்றைக்கு வரைக்கும் கிட்டத்தட்ட 4000 நோயாளிகள் எய்ட்ஸ் உடன் இனங்காணப்பட்டிருக்கிறார்கள். 

வவுனியா மாவட்டத்தைப் பொறுத்த வரையிலும் 2003 இலிருந்து இன்றைக்கு வரைக்கும் 28 எயிட்ஸ் நோயாளிகள் இனங்காணப்பட்டிருக்கிறார்கள். அதில் 17 நோயாளிகள் இறந்திருக்கிறார்கள். 11 நோயாளிகள் சிகிச்சை எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். இதில் ஆறு ஆண்களும் ஐந்து பெண்களும் அடங்குகிறார்கள்.

பொதுபாக எய்ட்ஸ் 3 முறைகளில் தொற்றுகிறது. ஒரு நோய்த் தொற்றுள்ளவருடன் பாலியல் ரீதியாக உறவு கொள்கின்ற போது தொற்றுகிறது. அதேபோல நோய்த் தொற்றுள்ள ஒருவர் தனது உடலுறுப்பு தானம், இரத்த தானம் என்பவற்றை மேற்கொள்ளும் போது கடத்தப்படுகிறது. மூன்றாவது தொற்றுள்ள ஒரு கர்ப்பிணி தாயிலிருந்து பிள்ளைக்கு பரவுகிறது.

வவுனியா மாவட்டத்தில் தற்போது இளைஞர்கள் மத்தியில் இந்த நோய்த் தொற்று அதிகரித்துள்ளது. அதாவது ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுபவர்கள் அதிகரித்துள்ளனர். அதுவே இளைஞர் மத்தியில் இந்த நோய் பரவ அதிக காரணமாக இருக்கின்றது. ஆகவே இளைஞர்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும். இளைஞர்கள் தமக்கு தெரியாதவர்களுடன் இருக்கும் போது பாலியல் தொடர்பான தொடர்பை வைத்திருக்கக் கூடாது.

வவுனியாவில் இருக்கக்கூடி 36 பெண் பாலியல் தொழிலாளிகள் எங்களிடம் சிகிச்சைக்கு வருகிறார்கள் என்றாலும் அவர்கள் தொடர்ச்சியாக வருகை தருவதில்லை. என்றாலும் அவர்களுக்கு இது தொடர்பான விழிப்புணர்வுகளை வழங்கி வருகிறோம்.

இலங்கையைப் பொறுத்த வரையில் தாயில் இருந்து பிள்ளைக்கு தொற்று கடத்தப்படுவதைத் வெற்றிகரமாக நாங்கள் தடுத்திருக்கிறோம். இதற்காக உலக சுகாதார நிறுவனத்திடம் இருந்தும் நற்சான்றிதழ் பெற்றிருக்கிறோம்.

ஆகவே முற்றுமுழுதாக இலங்கையில் இருந்து எயிட்ஸ் தொற்றுனை இல்லாமற் செய்வதற்கு இலங்கையில் உள்ள அனைவருமே ஒரு தடவை எச்.ஐ.வி பரிசோதனை செய்ய வேண்டும் என்பதே எங்கள் ஆலோசனையாக இருக்கிறது. இந்த கொவிட் காலத்தில் விழிப்புணர்வுகளைச் செய்வதில் சிரமம் இருப்பதால் ஊடகங்கள் ஊடாக இதனைச் செய்ய விரும்புகிறோம். 

2025 ஆம் ஆண்டிற்குள் முற்றுமுழுதாக எச்.ஐ.வி தொற்றை இல்லாமற் செய்வதே உலக சுகாதார ஸ்தாபனத்தின் குறிக்கோளாக இருக்கிறது. இந்த ஆண்டிற்கான தொனிப்பொருள் 'எச்.ஐ.வி தடுப்பு இளைஞர்களின் பொறுப்பு' என்பதாக இருக்கிறது காரணம் இந்த வருடத்தைப் பொறுத்த வரைக்கும் இளைஞர் மத்தியில்தான் இந்த தொற்று அதிகமாக காணப்படுகிறது என மேலும் தெரிவித்திருந்தார்.

No comments:

Post a Comment