அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடனின் வெற்றிக்கு எதிரான மேல் முறையீட்டு வழக்கு தள்ளுபடி - News View

Breaking

Post Top Ad

Saturday, November 28, 2020

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடனின் வெற்றிக்கு எதிரான மேல் முறையீட்டு வழக்கு தள்ளுபடி

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடனின் வெற்றிக்கு எதிராக தொடரப்பட்ட மேல் முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

அமெரிக்காவில் அண்மையில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார். ஆனால் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் தனது தோல்வியை ஒப்புக்கொள்ள மறுத்து வருகிறார்.

மேலும் டிரம்பின் பிரசார குழு பல்வேறு மாகாணங்களில் ஜோ பைடனின் வெற்றியை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த வகையில் தேர்தல் வெற்றியை தீர்மானிக்கும் முக்கிய மாகாணங்களில் ஒன்றான பென்சில்வேனியாவில் பதிவான பல லட்சம் தபால் வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கக்கோரி டிரம்ப் பிரசார குழு சார்பில் அந்த மாகாண கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

கடந்த வாரம் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மேத்யூ பிரான், தேர்தல் முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லை என கூறி வழக்கை தள்ளுபடி செய்தார். இதையடுத்து டிரம்ப் பிரசார குழு இந்த வழக்கை மேல் முறையீட்டு கோர்ட்டுக்கு எடுத்து சென்றது.

இந்த நிலையில் நேற்று (29) இந்த வழக்கு 3 நீதிபதிகளை கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “குற்றத்தை நிரூபிக்க முதலில் குற்றச்சாட்டுகள் தெளிவானதாக இருக்க வேண்டும். பின்னர் அதற்கு தேவையான ஆதாரங்கள் இருக்க வேண்டும். இந்த வழக்கில் அந்த இரண்டுமே இல்லை. எனவே இந்த வழக்கு விசாரணைக்கு தகுதியற்றது” என கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.

இது டிரம்ப் தரப்புக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. எனினும் இந்த வழக்கை அடுத்த கட்டமாக சுப்ரீம் கோர்ட்டுக்கு கொண்டு செல்ல உள்ளதாக டிரம்ப் பிரசார குழு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad