பிணையில் விடுதலையான ரிஷாத் பதியுதீன் கல்கிசை ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் - News View

Breaking

Post Top Ad

Saturday, November 28, 2020

பிணையில் விடுதலையான ரிஷாத் பதியுதீன் கல்கிசை ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்

(எம்.எப்.எம்.பஸீர்)

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனை பிணையில் விடுவிக்க கோட்டை நீதிவான் நீதிமன்றம் கடந்த 25 ஆம் திகதி உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது அவர் பிணையில் விடுவிக்கப்பட்டு, சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். 

நீதிமன்ற பிணை உத்தரவின் பின்னர் பி.சி.ஆர். பரிசோதனைக்கு முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதன் முடிவுகளின் அடிப்படையில், அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே அங்கிருந்து, அரசாங்கம் தனிமைப்படுத்தல் நிலையமாக அறிவித்துள்ள கல்கிசை ஹோட்டல் ஒன்றுக்கு மாற்றப்பட்டுள்ள ரிஷாத் பதியுதீன், தற்போது கட்டணம் செலுத்தி அந்த ஹோட்டலில் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார். 

நடந்து முடிந்த 2019 ஜனாதிபதித் தேர்தலின் போது, புத்தளத்தில் இருந்து 222 இ.போ.ச. பஸ்களில் 12 ஆயிரம் இடம்பெயர்ந்த வாக்காளர்களுக்கு சிலாவத்துறை பகுதிக்கு, வாக்களிக்கச் செல்ல போக்குவரத்து வசதிகளை செய்துகொடுத்தமை ஊடாக, நீண்டகாலமாக இடம்பெயர்ந்தோரை மீளக் குடியமர்த்துவதற்கான திட்டத்தின் 9.5 மில்லியன் ரூபாவை தவறாக பயன்படுத்தியமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பிலான விசாரணைகள் கடந்த 25 ஆம் திகதி கோட்டை நீதிவான் பிரியந்த லியனகே முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது, முன்வைக்கப்பட்ட பிணைக் கோரிக்கைகளை ஏற்று ரிஷாத்துக்கு பிணை வழங்கப்பட்டது.

அதன்படி, ஒரு இலட்சம் ரூபா ரொக்கப் பிணை மற்றும் 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீனின் வெளிநாட்டு பயணமும் தடை செய்யப்பட்டது. 

அதன்படி அவரது கடவுச் சீட்டை அடுத்த வழக்குத் தவணையில் மன்றில் ஒப்படைக்க உத்தரவிட்ட நீதிமன்றம் வெளிநாட்டுப் பயணத் தடை குறித்து குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு அறிவித்தல் அனுப்பியது. 

அத்துடன் சி.ஐ.டி. விசாரணைகளுக்கு அழைக்கும் போது கண்டிப்பாக அந்த விசாரணைகளுக்கு செல்ல வேண்டும் எனவும் நிபந்தனை விதித்தது. அதன்படியே, சுமார் 38 நாட்களின் பின்னர் ரிஷாத் பதியுதீனுக்கு பிணையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad