அரசாங்க வேலைதான் சோறு போடும் என்ற மனநிலையை மாற்றி காணிக்கு விண்ணப்பியுங்கள் - காரைதீவு தவிசாளர் ஜெயசிறில் கோரிக்கை - News View

About Us

About Us

Breaking

Friday, November 13, 2020

அரசாங்க வேலைதான் சோறு போடும் என்ற மனநிலையை மாற்றி காணிக்கு விண்ணப்பியுங்கள் - காரைதீவு தவிசாளர் ஜெயசிறில் கோரிக்கை

(காரைதீவு நிருபர் சகா)

அரசாங்க வேலைதான் சோறு போடும் என்ற எண்ணத்திலிருந்து மாறுபட்ட சமூகமாக நம் இளைஞர்களும் மாற வேண்டும். ஒரு லட்சம் (100,000) அரச வேலை வாய்ப்பு என்று அறிவித்தால் பத்து லட்சம் (10,00,000) பேர் விண்ணப்பம் செய்வார்கள். ஆனாலும் ஒரு லட்சம் (100,000) ஏக்கர் காணி வழங்குவதற்காக அரசாங்கம் விண்ணப்பங்களைக் கோரிய போது ஐம்பது ஆயிரம் (50,000) விண்ணப்பங்களைக் கூட எமது இளைஞர்கள் விண்ணப்பிக்கவில்லை என்பது கூடுதல் தகவலாக உள்ளது. எனவே அரசாங்கத்தால் விண்ணப்ப முடிவுத் திகதி நவம்பர் 15 வரை நீடிக்கபட்டுள்ளது. விவசாயம் செய்ய ஆர்வமுள்ள அனைவரும் பிரதேச செயலக காணிப்பகுதியில் விண்ணப்பத்தைப் பெற்று விண்ணப்பியுங்கள்.

இவ்வாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்தரும் காரைதீவு பிரதேச சபைத் தவிசாளருமான கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் வேண்டுகோள் விடுத்தார்.

ஒரு லட்சம் ஏக்கர் காணித் துண்டுகளை இளைஞர்களுக்கு வழங்கி விவசாய உற்பத்தி உள்ளிட்ட சுய தொழில் வாய்ப்புகளை மேம்படுத்த அரசாங்கம் முடிவெடுத்து விண்ணப்பங்களைக் கோரியது. எங்கள் இளைஞர்கள் பலர் இதில் அக்கறை எடுப்பதாகத் தெரியவில்லை. மிகக்குறுகிய விண்ணப்பங்களே கிடைத்ததால் விண்ணப்ப முடிவு திகதி 15.11.2020 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

நம் இளைஞர்கள் அக்கறை காட்டவில்லை என்ற செய்தி அதிர்ச்சியாக இருந்தது. காணி கிடைத்தால் முழு நேர விவசாயம்தான் செய்ய வேண்டியதில்லை. காணியில் வெறுமனே விவசாயம் மட்டும்தான் செய்ய முடியும் என்ற மாயையில் இருந்து முதலில் வெளியே வாருங்கள். நீங்கள் இன்று பெருமளவில் விண்ணப்பிக்காமல் விடுவதால் என்ன நடக்கலாம் என்பதை முதலில் கூறி விடுகிறேன்.

தமிழ் மக்கள் அல்லாதவர்கள் கூட பெருமளவில் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணிகளைப் பெற்றுக் கொண்டு தங்கள் தொழில்களை விவசாயத்தை முன்னெடுத்து காலப்போக்கில் நிரந்தரமாக அந்தப் பிரதேசங்களில் குடியேறிவிடவும் கூடும்.

அப்போது வந்து நின்று குத்துது குடையுது என்று கோஷம் போடுவீர்கள். இன்று உங்களுக்கு வாய்ப்புகள் தரப்படுகின்றன. அதை நாம் பயன்படுத்தாமல் விடுவதால் வாய்ப்புகளை இன்னொருவர் பறித்துக் கொள்வார் அல்லது பயன்படுத்திக் கொள்வார்.

முக்கியமாக முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், கிளிநொச்சி பகுதிகளில் அதிகம் அரச காணிகள் இருக்கின்றன. அத்துடன் அரச காடுகளையும் பயன்படுத்திக் கொள்ள மாவட்டங்களுக்கு கடந்த அமைச்சரவை கூட்டத்தில் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. காட்டு இலாகாவும் இணைந்து செயற்பட உள்ளது.

இன்று இந்த வாய்ப்பை தமிழ் இளைஞர்கள் பயன்படுத்தாவிடின் நாளை இதன் விளைவுகள் உங்களுக்கு எதிராகவும் எங்கள் அரசியல் கட்சிகள் இவ்வாறான தேவையான நேரங்களில் அடைகாத்துவிட்டு பின்னர் மக்களை திரட்டி தங்கள் அரசியலுக்காக கூச்சலிடும் சூழலை மட்டுமே விட்டு வைக்கும்.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
45 வயதுக்கு உட்பட்ட யாரும் விண்ணப்பிக்கலாம். நீங்கள் எந்தத் தொழில் செய்து கொண்டிருந்தாலும் பரவாயில்லை. அந்தத் தொழிலை செய்து கொண்டே இந்தக் காணியில் புதிய தொழில் முயற்சிகளைத் தொடங்கலாம்.

இலகுவாக என்ன செய்யலாம்?
தேக்கு மரக்காடுகளை உருவாக்குங்கள். இன்று தென் பகுதிகளில் பல நிறுவனங்கள் அதை மிகப்பெரிய இலாபம் ஈட்டும் தொழிலாகச் செய்கிறார்கள்.

மிகச்சிறிய முதலீடு!
ஒரு வருடம் (இரண்டு மழைகள்) கவனமாக பராமரித்துவிட்டு அதன்பின் அவ்வப்போது கவனித்தால் போதும். 10 வருடங்களில் மிகப்பெரிய இலாபம் ஈட்டலாம். தளபாட உற்பத்தி துறை மர ஏற்றுமதியில் நிறைய வாய்ப்புகள் உள்ளன. தவிர வேறு விவசாய உற்பத்திகள் உட்பட கரையோரப் பகுதிகளில் காணிகள் கிடைத்தால் உவர்நீர், நன்னீர் மீன் வளர்ப்பு, இறால் வளர்ப்பு உள்ளிட்ட பல இலாப மீட்டும் சுய தொழிலைச் செய்யலாம். உவர் நீர் இறால் வளர்ப்பு திட்டங்களுக்கு 50 வீதம் வரை மிகச் சிறிய வட்டியுடன் கடன் கிடைக்கிறது. 3-4 வருடங்களில் போட்ட முதலீட்டை மீளப்பெற்று விடும் அளவுக்கு லாபகரமாகச் செய்யலாம் என்றார்.

No comments:

Post a Comment