மேல் மாகாணத்தில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு நாளை (02) அதிகாலை 5.00 மணிக்கு தளர்த்தப்படவிருந்த நிலையில், மேலும் 7 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் பரிந்துரைக்கு அமைய, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
அதற்கமைய, கடந்த வெள்ளிக்கிழமை (30) நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்பட்டு, நாளை (02) அதிகாலை 5.00 மணி வரைமேல் மாகாணத்தில் செயற்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம், தொடர்ந்தும் எதிர்வரும் நவம்பர் 09ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 5.00 மணி வரை தொடர்ந்தும் அமுல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேல் மகாணத்திற்கு மேலதிகமாக, இரத்தினபுரி மாவட்டத்தின் எஹலியகொடை பொலிஸ் பிரிவு, குருணாகல் நகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகள், குளியாபிட்டி பொலிஸ் பிரிவிற்கும் நாளை (02) அதிகாலை 5.00 மணி முதல் நவம்பர் 09ஆம் திகதி அதிகாலை 5.00 மணி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் இருக்கும் என, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.
அத்துடன், தாம் வசிக்கும் மாவட்டத்திலிருந்து மற்றுமொரு மாவட்டத்திற்கு செல்வதும் தடை செய்யப்படுவதாக, இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
No comments:
Post a Comment