அடையாளங்காணப்படாத தொற்றாளர்கள் இருப்பது சிறந்ததல்ல - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை - News View

About Us

About Us

Breaking

Monday, November 30, 2020

அடையாளங்காணப்படாத தொற்றாளர்கள் இருப்பது சிறந்ததல்ல - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

(எம்.மனோசித்ரா)

நாட்டில் நாளாந்தம் இனங்காணப்படும் தொற்றாளர்கள் மாவட்ட ரீதியாக வகைப்படுத்தப்பட்டதன் பின்னர், சுமார் 100 அல்லது 200 பேர் வேறு தொற்றாளர்கள் என்று அடையாளப்படுத்தப்படுகிறார்கள். இவ்வாறு நூற்றுக்கணக்கான தொற்றாளர்கள் அடையாளங்காணப்படாதவர்களாக இருப்பது சிறந்த நிலைவரம் அல்ல என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஹரித அழுத்கே மேற்கூறியவாறு எச்சரித்தார்.

அவர் மேலும் கூறுகையில், நாட்டில் தினமும் இனங்காணப்படும் தொற்றார்களை மாவட்ட ரீதியில் வகைப்படுத்திய பின்னர் சுமார் 100 அல்லது 200 பேர் வேறு தொற்றாளர்கள் என்று அடையாளப்படுத்தப்படுகிறார்கள். இதனை சிறந்த ஒரு நிலைவரம் அல்ல என்பதை தெரிவிக்க விரும்புகின்றோம்.

குறித்த 100 அல்லது 200 தொற்றாளர்கள் எந்த மாவட்டத்திலும் சேர்க்கப்படாவிட்டாலும் அவர்களும் நாட்டின் பிரஜைகளே. இவர்கள் நாட்டின் ஏதேனுமொரு பகுதியில் உள்ள தொற்றாளர்களாவர். அவர்கள் எந்த பிரதேசங்களில் என்பதை குறிப்பிட முடியாவிட்டால் அது மிகவும் அபாயமான நிலைமையாகும்.

எவ்வாறு இது போன்ற தொற்றாளர்கள் அடையாளப்படுத்தப்படுகிறார்கள் என்பதை தொற்று நோயியல் பிரிவு நாட்டுக்கு தெரியப்படுத்த வேண்டும். 

முகவரிகளை சரியாக கண்டுபிடிக்க முடியாமையின் காரணமாகவா இவ்வாறு இடம்பெறுகிறது ? அல்லது தொழிநுட்ப ரீதியான காரணிகளால் இவர்களை ஏனைய தொற்றாளர்களின் எண்ணிக்கைக்குள் உள்ளடக்க முடியாமலுள்ளதா? அல்லது சிறைச்சாலையில் தொற்றாளர்கள் இனங்காணப்படுவதால் அவர்கள் வேறு என்ற பிரிவிற்குள் உள்ளடக்கப்பட்டுள்ளார்களா? 

சனிக்கிழமை கண்டி தேசிய வைத்தியசாலையில் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அதேபோன்று நாரஹேன்பிட்டவிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றிலும் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளார்கள். இவ்வாறு வைத்தியசாலைகளுக்குள் தற்போது தொற்றாளர்கள் இனங்காணப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறான கிளை கொத்தணிகளைக் கட்டுப்படுத்துவதற்கு சுகாதாரத் துறையினர் உயர்ந்தபட்ச சேவையை ஆற்ற வேண்டும். அத்தோடு இவை தொடர்பில் தமது பரிந்துரை என்ன என்பதையும் நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment