ஒன்றரை மாத பணிப்பகிஷ்கரிப்பின் பின் பணிக்குத் திரும்பிய 2,500 தாதியர்கள்..! - News View

About Us

About Us

Breaking

Thursday, November 19, 2020

ஒன்றரை மாத பணிப்பகிஷ்கரிப்பின் பின் பணிக்குத் திரும்பிய 2,500 தாதியர்கள்..!

ஊவா மாகாண குடும்ப நல சுகாதாரத் தாதியர்கள் கடந்த ஒன்றரை மாத காலமாக மேற்கொண்டிருந்த பணிப்பகிஷ்கரிப்புக்கள் நிறைவு பெற்று, பகிஸ்கரிப்பில் ஈடுபட்டிருந்த 2,500 தாதியர்களும் தற்போது பணிக்குத் திரும்பியுள்ளனர்.

ஊவா மாகாணத்தில் மட்டும் இத்தாதியர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் முதல் வழங்கப்பட வேண்டிய போக்குவரத்து செலவுத் தொகை, அரசினால் வழங்க தீர்மானிக்கப்பட்ட 'கொரோனா' தொற்று நீக்கும் கால கடமைகளுக்கான கொடுப்பனவுகள், ஊக்குவிப்பு உள்ளிட்ட ஏனைய கொடுப்பனவுகள் வழங்கப்படாமையைக் கண்டித்தே கடந்த ஒன்றரை மாத காலமாக, இத்தாதியர்கள் பணிப்பகிஸ்கரிப்புகளில் ஈடுப்பட்டிருந்தனர்.

இப்பணிப்பகிஸ்கரிப்புக்களில் ஈடுபட்டிருந்த தாதிகள், தமக்கு ஏற்பட்டிருக்கும் அநீதிகள் குறித்து, பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமாரின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

இதையடுத்து, பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமார், மேற்படி விடயம் தொடர்பாக, ஊவா மாகாண ஆளுனர் ஏ.ஜே.எம். முஸம்மிலை நேரடியாக சந்தித்து ஊவா மாகாண தாதியர்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகள் குறித்து தெளிபடுத்தினார்.

இதனையடுத்து, ஆளுனர் ஊவா மாகாணத்தின் மொனராகலை மற்றும் பதுளை மாவட்ட அரச அதிபர்கள் மாகாண சுகாதார பணிப்பாளர்கள் ஆகியோரை 17.11.2020 இல் தமது அலுவலகத்திற்கு வரவழைத்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டிருந்தார்.

அப்பேச்சுவார்த்தையில் சுமூக நிலை ஏற்பட்டு பகிஸ்கரிப்பில் ஈடுபட்டிருந்த தாதியர்கள் முன்வைத்த கோரிக்கைகள் அனைத்தையும் நிவர்த்தி செய்ய இணக்கம் எட்டப்பட்டது. இதையடுத்து பணிப்பகிஸ்கரிப்பு கைவிடப்பட்டு அனைவரும் தற்போது பணிக்குத் திரும்பியுள்ளனர்.

குடும்ப நல சுகாதாரத் தாதியர்களுக்கான மேற்படிக் கொடுப்பனவுகள் ஊவா மாகாணத்தை தவிர்த்து நாட்டின் அனைத்து மாகாணங்களில் கடமையாற்றும் குடும்ப சுகாதாரத் தாதியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. 

ஆனால் ஊவா மாகாண தாதியர்களுக்கு மட்டும் மேற்படி கொடுப்பனவுகள் வழங்கப்பட்டிருக்கவில்லை. இதனை ஆட்சேபித்தே மேற்படி பணிப்பகிஸ்கரிப்புக்கள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment