இலங்கையில் கைப்பற்றப்பட்ட 100 கிலோ ஹெரோயின் போதைப் பொருள் : சொகுசு காருடன் மூன்று சந்தேக நபர்கள் கைது : சர்வதேச பொலிஸாரின் ஒத்துழைப்புடன் விசாரணை - News View

About Us

About Us

Breaking

Sunday, November 22, 2020

இலங்கையில் கைப்பற்றப்பட்ட 100 கிலோ ஹெரோயின் போதைப் பொருள் : சொகுசு காருடன் மூன்று சந்தேக நபர்கள் கைது : சர்வதேச பொலிஸாரின் ஒத்துழைப்புடன் விசாரணை

(செ.தேன்மொழி)

வெலிகம பகுதியில் கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப் பொருள் தொடர்பில் சர்வதேச பொலிஸாரிடமும் ஒத்துழைப்புகளை பெற்றுக் கொண்டு விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது, கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார் தொடர்ந்தும், சுகாதார பிரிவுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றனர். இதனால் 800 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

இதன்போது வைரஸ் தொற்றுக்குள்ளான 300 பொலிஸ் உத்தியோகத்தர்கள் குணமடைந்துள்ளனர். வைரஸ் தொற்றை தடுப்பதற்காக செயற்பட்டு வந்தாலும் பொலிஸாருக்கு நியமிக்கப்பட்டுள்ள வழமையான பொறுப்புகளை நாம் நிறைவேற்ற தவரவில்லை.

அதற்கமைய, நாட்டில் இடம்பெறும் குற்றச் செயற்பாடுகளை தவிர்த்தல், குற்ற செயற்பாடுகள் தொடர்பான சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளல், திட்டமிட்ட குற்றச் செயற்பாடுகளை தவிர்த்தல், போதைப் பொருள் மற்றும் மதுபான கடத்தல்கள் தொடர்பான சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்தல் என்பன பொலிஸாருக்கே உரித்தான பொறுப்புகளாகும்.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை பொலிஸ் விசேட அதிரடிப் படையின் கட்டளைத் தளபதியான பிரதிப் பொலிஸ்மா அதிபர் வருண ஜயசுந்தரவின் மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது 100 கிலோ கிராம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது. இந்த சுற்றிவளைப்புக்கு பொலிஸ் புலனாய்வு பிரிவு மற்றும் இரகசிய தகவல் பிரிவும் ஒத்துழைப்பை வழங்கியிருந்தது.

பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் சுமார் ஐந்து மாத காலமாக மேற்கொள்ளப்பட்டு வந்த சோதனை நடவடிக்கைகளுக்கமையவே இந்த போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலை ஏற்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் மீட்கப்பட்ட பெருந்தொகையான போதைப் பொருள் இதுவாகும்.

ரத்கம பகுதியில் வசித்து வந்த நிலையில் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படும் சந்தேக நபருக்கு சொந்தமான போதைப் பொருட்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர். குறித்த நபர் தற்போது இத்தாலியில் வசித்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.

இதேவேளை, இப்போதைப் பொருள் தொகையை கடல் மார்க்கமாகவே நாட்டுக்கு சந்தேக நபர்கள் எடுத்து வந்திருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர். சர்வதேச ரீதியில் இந்த கடத்தல் ஒழுங்குச் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளது. 

குறித்த சந்தேக நபரை அடையாளம் காணுவதற்காக சர்வதேச பொலிஸாரிடம் ஒத்துழைப்புகளை பெற்றுக் கொள்ள எதிர்பார்த்திருப்பதுடன், பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் ஏனைய துறைகளிலும் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ள எதிர்ப்பார்த்து இருக்கின்றோம்.

விசேட அதிரடிப் படையைச் சேர்ந்த 15 பேரைக் கொண்ட குழுவினாலேயே இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்த ஹெரோயின் போதைப் பொருள் கொழும்பு அல்லது வேறொரு பகுதிக்கு எடுத்துச் செல்வதற்கு சந்தேக நபர்கள் முயற்சித்து உள்ளனர். இதன்போது மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுள் ஒருவரே இந்த போதைப் பொருளை எடுத்து வந்துள்ளார்.

கொட்டிகாவத்த பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய நபரும், பொல்லத்துமோதர பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய நபரொருவரும் மற்றும் தெவிநுவர பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய நபரொருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது கைப்பற்றப்பட்ட சொகுசு கார் கொட்டிகாவத்த பகுதியைச் சேர்ந்த சந்தேக நபருக்குறியது என்றும் தெரிய வந்துள்ளது.

இவர்களைத் தவிர இந்த போதைப் பொருள் கடத்தலுக்கு உள்நாட்டில் உள்ள சில கடத்தல் காரர்களும் உதவி புரிந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது. அவர்களை அடையாளம் காண்பதற்காகவும் தொடர்ந்தும் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சந்தேக நபர்கள் மற்றும் இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட கார், போதைப் பொருள் தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. 

இச்சந்தேக நபர்களை நேற்றைய தினம் மாத்தறை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, 7 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணைக்குட்படுத்தவும் அனுமதி பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் மற்றும் விசேட அதிரடிப் படையினரும் முன்னெடுத்து வருகின்றனர்.

No comments:

Post a Comment