(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம்)
கடந்த அரசாங்கம் வெளிநாட்டு உடன்படிக்கைகளை மேற்கொண்டபோது தேசிய அக்கறையுடன் செயற்படவில்லை. அத்துடன் உடன்படிக்கைகள் சர்வதேசத்துடன் இணைந்துதான் மேற்கொள்ள வேண்டும். அதற்காக ஐ.நா.விடம் மண்டியிடும் அளவுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை என நிதி ராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று சர்வதேச உடன்படிக்கைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் பதிலளித்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், கடந்த அரசாங்கம் மேற்கொண்ட சர்வதேச நாணய நிதியம், சிங்கப்பூர் உடன்படிக்கை போன்றவை தேசிய அக்கறையுடன் மேற்கொள்ளப்பட்டவை அல்ல. அதேபோன்று எம்.சீ.சீ. உடன்படிக்கை, சீனாவுடனான உடன்படிக்கை உள்ளிட்டவைகளை நாம் முழுமையாக ஆராய்ந்தே செயற்படுத்துவோம். எமது நாட்டுக்கு வெற்றியைக் கொண்டுவரும் உடன்படிக்கைகளே எமக்கு அவசியம். அதையே நாம் மேற்கொள்வோம்.
19ஆவது அரசியலமைப்புத் திருத்தம் மக்களை விட்டு விலகிச் சென்று செயற்படும் வகையிலே அமைந்திருக்கின்றது. எனினும் நாம் மக்களுடன் சேர்ந்து செயற்படுகின்றோம் அதனால்தான் 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை கொண்டு வந்துள்ளோம்.
ஆளும் கட்சி ஒரு கொள்கையுடனும் எதிர்க்கட்சி ஒரு கொள்கையுடன் செயல்படுகிறது. அவர்களது அரசாங்கத்தில் எதையும் செய்ய முடியாது என்ற சித்தாந்தம் இருந்தது. அதனால்தான் வெளிநாட்டுக்கு வளங்களை விற்று வெளிநாட்டு ஆளுகைக்குள் மாட்டிக்கொண்டனர். அவ்வாறு செயற்பட வேண்டிய அவசியம் எமக்கில்லை.
கடந்த அரசாங்கம் சர்வதேசத்தின் மீது நம்பிக்கை வைத்தே செயற்பட்டனர். நாமோ இலங்கை மக்கள் மீது நம்பிக்கை வைத்து செயற்படுகின்றோம். அதனால் புதிய எதிர்க்கட்சி புதிய சித்தாந்தத்துடன் செயற்படும் என நம்புகின்றோம் என்றார்.
No comments:
Post a Comment