அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பொம்பியோவை பாப்பரசர் பிரான்சிஸ் சந்திக்க மறுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பொம்பியோ இத்தாலியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவர் வத்திக்கான் வந்து பாப்பரசர் பிரான்சிஸ்சை சந்திக்க விரும்பினார். ஆனால் இந்த சந்திப்பு மறுக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி வத்திக்கானின் வெளியுறவு அமைச்சர் பால் கல்லாகர், வெளியுறவுத்துறை செயலாளர் கார்டினல் பியட்ரோ பரோல் ஆகியோர் கூறும்போது, “மைக் பொம்பியோவை பாப்பரசர் சந்திக்க மாட்டார். தேர்தல் காலத்தில் பாப்பரசர் பிரான்சிஸ் எந்த அரசியல் பிரபலங்களையும் சந்திப்பது இல்லை என்பதை ஏற்கனவே தெளிவுபடுத்தி உள்ளார். எனவே இதுதான் காரணம்” என குறிப்பிட்டனர்.
கடந்த மாத தொடக்கத்தில் மைக் பொம்பியோ பத்திரிகை ஒன்றில் எழுதிய கட்டுரையில், கத்தோலிக்க திருச்சபை, பிஷப்புகளை நியமிப்பது தொடர்பாக சீனாவுடனான ஒரு ஒப்பந்தத்தை புதுப்பிப்பதின் மூலம் அதன் தார்மீக அதிகாரத்தை பணயம் வைத்து வருகிறது என்று விமர்சித்திருந்தது நினைவுகூரத்தக்கது.
சீன பிஷப்புகள் நியமனத்தில் சீன அரசின் கருத்தை கேட்பதாக 2018ம் ஆண்டு, சீனாவுடன் வத்திக்கான் ஒரு ஒப்பந்தம் செய்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஒப்பந்தம் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் புதுப்பிக்கப்பட உள்ளது.
இந்த நிலையில் மைக் பொம்பியோ ரோமில் நேற்று முன்தினம் ஒரு நிகழ்ச்சியில் பேசியபோது, சீனாவில் மத சுதந்திரத்தை காக்க வத்திகானுக்கு அழைப்பு விடுத்தார். மேலும், சீனாவை விட மத சுதந்திரம் எங்கும் தாக்குதலுக்கு ஆளாகவில்லை என்றும் கூறினார்.
மைக் பொம்பியோவின் கட்டுரையும், பேச்சும் வத்திக்கானுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
No comments:
Post a Comment