மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) கலந்துகொள்ள ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 27 ஆம் திகதி நடைபெறவுள்ள மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரால் சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த விடயம் குறித்து மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணை நீதிபதி டீ.எஸ். சூசைதாஸ் முன்னிலையில் நேற்று (23) இடம்பெற்றது.
வழக்கு தொடுநர் சார்பில் மன்றில் ஆஜராகிய அரச சட்டத்தரணி மாதினி விக்னேஸ்வரன், சிவநேசத்துரை சந்திரகாந்தன் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் பங்கேற்பதற்கு ஆட்சேபனை தெரிவித்துள்ளார்.
மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவர் என்ற வகையிலேயே சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கும் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கும் தொடர்பில்லை எனவும் அரச சட்டத்தரணி மன்றில் கூறியுள்ளார்.
இணைத் தலைவர் என்ற வகையில் நிர்வாக செயற்பாடுகளுக்கு அனுமதி கோரப்பட்டுள்ளதாகவும், அதற்கு தாம் ஆட்சேபனை தெரிவிப்பதாகவும் கூறியுள்ள அரச தரப்பு சட்டத்தரணி, இதனூடாக சிவநேசத்துரை சந்திரகாந்தனின் பாராளுமன்ற சிறப்புரிமை மீறப்படவில்லை எனவும் சுட்டிக் காட்டியுள்ளார்.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் விளக்கமறியல் கைதியாக உள்ள ஒருவருக்கு முதற்தடவை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பங்கேற்க அனுமதி வழங்கப்படும் பட்சத்தில், தொடர்ந்தும் அனுமதி வழங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படக்கூடும் எனவும் மன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அனுமதி வழங்கப்பட்டால் எதிர்காலத்தில் ஏனைய விடயங்கள் தொடர்பிலும் விளக்கமறியல் கைதியான, பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் சுதந்திரமாக நடமாடுவதற்கு வாய்ப்புகள் ஏற்படும் என அரச சட்டத்தரணி மாதினி விக்னேஸ்வரன் நீதிமன்றத்திற்கு சுட்டிக்காட்டியுள்ளார்.
விடயங்களை ஆராய்ந்த மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி, இந்த மனு தொடர்பான கட்டளை எதிர்வரும் 26 ஆம் திகதி பிறப்பிக்கப்படும் என உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment