மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் எந்த பிரிவும் மூடப்படவில்லை, ஊடகங்களில் வந்த செய்திகளில் எவ்வித உண்மையுமில்லை - வைத்தியசாலை பணிப்பாளர் - News View

About Us

About Us

Breaking

Thursday, October 15, 2020

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் எந்த பிரிவும் மூடப்படவில்லை, ஊடகங்களில் வந்த செய்திகளில் எவ்வித உண்மையுமில்லை - வைத்தியசாலை பணிப்பாளர்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமை புரிந்து வந்த தாதிய உத்தியோகத்தர் ஒருவருக்கு கம்பஹா மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் கடமை புரிந்த வைத்தியசாலைப் பிரிவு மூடப்பட்டதாக ஊடகங்களில் வந்த செய்திகளில் எவ்வித உண்மையுமில்லை என மட்டு. போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் திருமதி கலாரஞ்சினி கணேசலிங்கம் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், குறித்த தாதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவரால் இவ்வைத்தியசாலைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வைத்தியசாலை கொவிட் செயலணிக் குழுமம், தேசிய தொற்று நோயியல் விஞ்ஞானப் பிரிவின் நிபுணர்களுடன் ஆலோசித்தபோது நோய்த் தொற்றுக்கான ஆபத்து மதிப்பீடு சாத்தியம் மிகக்குறைவாக இருந்த போதிலும் மக்கள் நலன்கருதி குறித்த தாதிய உத்தியோகத்தர் கடமை புரிந்த பிரிவில் பணியாற்றும், பணியாற்றச் செல்லும் அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் கொவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதனையடுத்து இவர்கள் எவருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லையென உத்தியோகபூர்வ பரிசோதனை முடிவுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. மேலும் எந்த ஒரு வைத்தியசாலை உத்தியோகத்தரும் தனிமைப்படுத்தப்படவுமில்லை எனவும், மக்கள் வதந்திகளை நம்பி அச்சங்கொள்ளத் தேவையில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் அனைத்து வைத்திய சேவைகளும் எவ்வித இடையூறுமின்றி தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாகவும், பொதுமக்கள் சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்களைத் தொடர்ச்சியாகப் பின்பற்றி நடப்பதுடன் நோயாளர்களைப் பார்வையிட வைத்தியசாலைக்கு வருபவர்கள் மட்டுப்படுத்திக் கொள்ளுமாறும், அத்தியாவசிய வைத்திய தேவைகளுக்கு தமது வதிவிடத்திற்கு அண்மையிலுள்ள வைத்தியசாலைகளை நாடுமாறும் கேட்டுக் கொண்டார்.

இது தவிர மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை தொடர்பாக தகவல்கள் பணிப்பாளரான என்னால் வெளியிடப்படாமல் வேறு நபர்களாலோ அல்லது ஊடகங்களாலோ அல்லது வேறு வழிகளினாலோ வெளியிடப்பட்ட செய்திகளுக்கு வைத்தியசாலைப பணிப்பாளர் பொறுப்புக் கூற முடியாது எனவும் அவர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment